Sunday, December 12, 2010

நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்

ஜெயந்தனின் அறிமுகம் கிடைத்தது அசோகமித்ரனின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" (நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு)தொகுப்பில்.ஜெயந்தனின் "பகல் உறவுகள்" சிறுகதை அதில் இடம்பெற்றிருந்தது.அத்தனை எளிதில் கடந்து விட முடியாத கதை அது.வெளியுலகத்திற்கு ஆதர்சமாய் தெரியும் தம்பதிகளின் நிஜ உலகம் பழிவாங்கலும்,வன்மமும் பீடித்து அலங்கோலமாய் இருப்பதைச் சொல்லும் கதை.புரிதலின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் விபரீதங்கள் அழுத்தமாய் முன்வைக்கப்படுகின்றன இக்கதையில்.எதிரியின் பலவீனம் அறிந்து வீழ்த்துவது புத்திசாலித்தனம்,இதுவே கணவன் மனைவிக்கிடையே நிகழுமாயின்?!அவர்கள் படித்தவர்கள். நாகரிகம் கற்றவர்கள்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்க படவேண்டியவை.தமிழில் முக்கியமான சிறுகதை இது.

அதற்கு பிறகு ஜெயந்தனின் கதைகள் எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.தொடர்ந்து அந்த எழுத்தாளனை நினைவில் நிறுத்திக்கொள்ள இச்சிறுகதையே போதுமானதாய் இருந்தது.தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களுள் ஜெயந்தனும் ஒருவர்.வம்சி வெளியிட்டுள்ள ஜெயந்தனின் மொத்த சிறுகதைகளின் இத்தொகுப்பு நீண்ட தேடலுக்கு பிறகு வாசிக்க கிடைத்தது.நிதானமாய் வாசித்து,ரசிக்கப்பட வேண்டியவர்கள் ஜெயந்தனின் கதை மாந்தர்கள்.தன் இயல்போடு இருந்து நம்மை பதற்றம் கொள்ள செய்பவர்கள்.மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை தன் கதைகளில் வெளிக்காட்ட கொஞ்சமும் தயங்கவில்லை இவர்.




இத்தொகுப்பில் மிகப்பிடித்த சில கதைகள் குறித்து இங்கே..

"வெள்ளம்",பெரு மழை நாளொன்றில் தன் வயலில் தனித்திருக்கும் நாயகன் , மழைக்கு ஒதுங்கும் அக்கிராமத்து பெண்களால் அலைக்கழிக்கபடும் கதை.பெண்கள் தான் எத்தனை வசீகரமானவர்கள்..ரகசியங்களின் குடுவை...விடை அறிந்து கொள்ள முடியாத புதிர் விளையாட்டில் எப்போதும் வெற்றி பெறுபவர்கள்.சிறுமி,பேரிளம்பெண்,புதிதாய் திருமணம் ஆனவள் என அவ்விடம் இருக்கும் ஒவ்வொருத்தியும் மாறி மாறி தேவதை கோலம் பூணுகின்றனர்,அவன் தனிமை புலம்பல்களுக்கும்,சிந்தனைகளுக்கும் உரம் போட்டபடி.மழை விட்டதும் பெண்கள் யாவரும் சென்று விட,சட்டென தோன்றிய வெறுமையை அவன் மேகத்தின் துணை கொண்டு வரவேற்பதோடு முடிகின்றது கதை.ஆணின் அகவுலகை - தனிமை துயரை இத்தனை நெருக்கமாய் வாசகனுக்கு வேறெந்த கதையும் முன்வைத்தாய் நினைவில்லை.

"துப்பாக்கி நாயக்கர்",தன் மனைவியை பெண்டாள முயன்ற வேலையாளின் துரோகத்தை,ஊரார் முன் ஏற்பட்ட அவமானத்தை கடக்க நிதானிக்கும் முன் நிகழும் அவனின் தற்கொலை - என சுழற்றி அடிக்கும் சூழலில்,இயல்பிற்கு மாறாய் நடந்து கொள்ளும் துப்பாக்கி நாயக்கரின் நிதான புத்தி அவ்வூராரோடு நம்மையும் ஆச்சர்யம் கொள்ள செய்வதே.பேச்சை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகம்.சமயங்களில் எல்லா உணர்ச்சிகளும் அதில் அடங்கி விடுவதுண்டு. சகித்து கொள்ள இயலாத துரோகத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை நேரடி உரையாடல் அதிகம் இன்றி காட்சிகளின் விவரிப்பில் நமக்கு உணர்த்துபவை ஏராளம்.

"உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"

- ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்


"வாழ்க்கை ஓடும்",ராஜேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நினைவூட்டிய கதை இது.பகல் முழுக்க அடித்து கொள்ளும் மருமகள் - மாமியார்,தொடர்ச்சியான வசைகளில் அக்கம்பக்கத்தாரை குளிர்வித்துவிட்டு,வீடு வந்து சேரும் ஆணிடமும் தங்கள் நியாயத்தை சொல்லி மேலும் கொஞ்சம் களேபரம் செய்து முடங்கி போகின்றனர்.மறுநாள் வெளியூருக்கு நாட்கணக்கில் கூலி வேலை செய்ய அவன் புறப்பட...முன்னிரவில் நடந்த கலவரத்தின் சுவடே தெரியாது மகிழ்ச்சியாய் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அப்படிதான், அவர்களின் அன்றாடம் அது..அடித்து கொள்வதும்,சேர்ந்து கொள்வதும்..எனக்கும்,உனக்கும், எல்லோருக்குமான வாழ்க்கை அப்படிதான் என்பதை போல!

"மீண்டும் கடவுளும் கந்தசாமியும்",புதுமைபித்தனின் ஓவியத்திற்கு நவீன வண்ணம் பூசும் முயற்சி.கந்தசாமிபிள்ளையை சினிமா தயாரிப்பாளராக்கி/குடிசை வீட்டை கோபுரமாக்கி....கடவுளுக்கு தொடர்ச்சியான ஆச்சர்யங்கள் இம்முறை."ஊமை ரணங்கள்", திருமண சடங்குகளுக்காய் மகளிடமே கையேந்த நேரிடும் ஏழை தந்தையின் கதை.சில அவமானங்களை வலிந்து ஏற்று கொள்வது கொடுமை.கதை.மோசமானதொரு சமூக சூழலை/மாற்றம் காணாது தொடரும் திருமண கொடுக்கல் வாங்கல்களை சாடும் இக்கதை எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவது.

"நாலாவது பரிமாணம்",இக்கதையின் முடிவில் உடன்பாடில்லை.கொஞ்சம் சினிமாத்தனமாய் தோன்றியது.இருப்பினும் பள்ளி ஆசிரியர்களான நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே தோன்றி,படரும் காதல்,வெகு இயல்பான உரையாடல்களோடு சொல்லப்பட்டிருக்கும் பாணி அருமை. தொடர்ச்சியான அவர்களின் உரையாடல்கள் இட்டு செல்லபோகும் இடம் எதுவென வாசகன் அறிந்திருந்தும், உடன் சேர்ந்து பயணிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை.

"பைத்தியம்","மாரம்மா",எழுதியவனும் படித்தவளும்",ஜாதி மான்" ஆகியவையும் குறிப்பிட தக்கவையே.நம்மை குறித்த,நமக்கான கதைகள் இவை.அலங்காரமற்ற வர்ணிப்புகள்.வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எதார்த்தங்களின் சித்தரிப்பு.கொஞ்சம் காத்திரமான குரலில் சமூகத்தை சாடும் கதைகளில் தெரிவது எழுத்தாளனின் கோபமும் அக்கறையும்.தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் கதைகள் இவை.

"நிராயுதபாணியின் ஆயுதங்கள்",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.

வெளியீடு - வம்சி
விலை - 400 ரூபாய்

Tuesday, November 30, 2010

எஸ்.ராவின் "பேசத்தெரிந்த நிழல்கள்"

நாவலையும்,சினிமாவையும் முறையே வாசகனுக்கும்,பார்வையாளனும் அணுகும்/அணுக வேண்டிய முறை குறித்து இக்கட்டுரையில் வாசித்த வரிகள் சத்தியமானவை.

இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை.அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது.அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள்"

திரைப்படங்கள்/நடிகர்கள் குறித்த தங்களின் விரிவான பார்வையாய் தமிழில் தொடர்ந்து முன்வைப்பவர்கள் எஸ்.ராவும் சாருவும்.என்னளவில் சாருவின் "தீராக்காதலி"(கே.பி சுந்தராம்பாள்)தொகுப்பு முக்கியமான ஒன்று.ரேயின் "பதேர் பாஞ்சாலி" குறித்த எஸ்.ராவின் 'பதேர் பாஞ்சாலி - நிதர்சன புனைவு" ,ஒரு திரைப்படத்தை மட்டுமே மையமாக கொண்டு தமிழில் வெளிவந்த முதல் நூல் என நினைக்கின்றேன்.நல்ல சினிமாவை,மறக்கடிக்கப்பட்ட நடிகர்களை தம் வாசகர்களுக்கு முன்னெடுத்து செல்லும் இம்முயற்சிகள் இப்பொழுது பரவலாய் காணப்படுவது மகிழ்ச்சிகரமானது.

எஸ்.ராவின் இந்த தொகுப்பு,முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனின் அவதானிப்பில் தமிழ்,மலையாளம் தொடங்கி உலகளவில் தான் ரசித்த திரைப்படங்கள்,குறும்படங்கள், விருப்பத்திற்குரிய நடிகர்கள்,நேர்காணல்கள் என தகவல்களை பகிர்ந்து கொண்டே செல்கின்றது.




சாவித்திரி,நடிப்பு ராட்சசி.நவராத்திரி திரைப்படத்தில்,மேடை நாடக காட்சியில்..முகத்தை வெட்டி,சிவாஜியிடம்,"அதாகப்பட்டது சுவாமி........." என கூறும் ஒரு காட்சி போதும் அவர் சிறப்பை பகிர.இத்தொகுப்பில் சாவித்திரி குறித்த கட்டுரையை(சாவித்திரி - இரண்டு பிம்பங்கள்) வாசித்து கொண்டிருக்கும் பொழுது,வைகை எக்ஸ்ப்ரஸ்ஸில் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி புத்தகத்தை வாங்கி ஆர்வமாய் அதை மட்டும் படித்துவிட்டு திருப்பி தந்தார்.கூடவே சாவித்திரி குறித்து தனக்கு தெரிந்த செய்திகளை சொல்லி கொண்டே வந்தார் சோகத்துடன்.அந்த நடிகையின் இறுதி நாட்கள் குறித்த உருக்கமான கட்டுரை அது.

"சிரித்தால் மட்டும் போதுமா?",நடிகர் நாகேஷை குறித்த இக்கட்டுரை அந்த மாபெரும் கலைஞன் குறித்த தகவல்களோடு அவருக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் குறித்தும் பேசுகின்றது. விருதுகளுக்கும் மேலான சிறப்பு ரசிகனின் வரவேற்பே.தருமியும்,செல்லப்பாவும் எளிதில் மறக்க கூடியவர்கள் அல்லவே!மொழி கடந்து சில நடிகர்கள் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.மலையாள நகைச்சுவை நடிகர்கள் ஜெகதி, ஜகதீஷ்,இன்னொசன்ட் எப்போதும் என் விருப்பதிற்குரியவர்கள்.ஜெகதியும்,இன்னொசென்ட்டும் இல்லாத படங்களே இல்லையா என்று கூட தோன்றும்.இத்தொகுப்பில் "நகைச்சுவை நாயகன்" கட்டுரை ஜெகதி குறித்தானது.

ராஜாவின் திருவாசகம்,முதன்முதலில் கேட்டது ஒரு இரவில்.ராஜாவை அதிகமாய் பிடித்து போன தருணங்களில் அதுவும் ஒன்று."எத்தனை கோபுரங்கள் இருந்தாலும்,தஞ்சை கோபுரம் தனித்துவமானது,ராஜாவும் அது போலவே" என்ற இயக்குனர் பாசிலின் வரிகள் நினைவிற்கு வருகின்றது.திருவாசக இசையில் கரைந்து உருகிய தருணங்களை பதிவு செய்கின்றது "திருவாசகம் கேட்ட பொழுது" கட்டுரை.(ராஜாவின் பாடல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும்..எப்பொழுதிற்குமான இசை).

"Wind Migration " மற்றும் "The Forgotten Woman " ஆகிய இரு ஆவணப் படங்கள் குறித்த தகவல்கள் பார்க்கும் ஆவலை தூண்டுபவை.Wind Migration ஆவணப்படத்தின் பல பகுதிகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.பறவைகளின் தீரா பயணத்தில் கொஞ்சம் நாமும் உடன் பயணிக்கும் சுவாரஸ்ய அனுபவம்."The Forgotten Woman ",மதுரா நகரில் தனித்து விடப்பட்ட விதவைகளை குறித்தது.உணவிற்கும்,இருப்பிடத்திற்கும் வழியின்றி எஞ்சிய நாட்களை விதியின் வசம்விட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் நிலை குறித்த இப்படத்தை இயக்கியிருப்பவர் திலீப் மேத்தா(தீபா மேத்தாவின் சகோதரர்).

மதுரை இருந்த நாட்களில் உலக சினிமா பார்ப்பதென்பது ஏழு கடல்,ஏழு மலை தாண்டி அடைய வேண்டிய காரியம் என்றிருக்கும்.ஹாலிவுட் படங்கள் குறித்து மட்டுமே அறிந்திருந்த காலம் அது.இணைய அறிமுகத்திற்கு பிறகு அதிகமாய் உலக சினிமா குறித்து அறிமுகம் கிடைத்தது எஸ்.ரா மற்றும் சுரேஷ் கண்ணனின் "பிச்சைபாத்திரம்" வலைத்தளங்களின் வழியே.தேசத்திற்கு தேசம் வேறுபடும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள திரைப்படங்களை தவிர்த்து வேறு எளிமையான வழியிராது.அவ்வகையில் இத்தொகுப்பில் கோடிட்டு காட்டப்படும் ஆசிய/பௌத்த/வியட்நாமிய திரைப்படங்கள் எண்ணற்றவை.

ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து பிற தேச திரைப்படங்கள் வேறுபடம் விதம் குறித்தும்,திரைப்பட வகைகள் குறித்தும் விரிவாய் அலசும் "ஆசிய - சினிமாவின் குவிமையம்'கட்டுரை முக்கியமான ஒன்று.மேலும் ஒரு குறிப்பிடதக்க பதிவு,அகிராவுடன் இரானிய இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் உரையாடல்.தொழில்முறை நடிகர்கள்,சர்வதேச விருதுகள்,மிகை நடிப்பு,தற்கால சினிமா குறித்தான அகிராவின் பார்வையை முன்வைக்கும் கட்டுரை.

இத்தொகுப்பின் கட்டுரைகள் சினிமாவை அணுகும் முறை குறித்தோ,அதன் நுணுக்கங்கள் குறித்தோ நமக்கு பாடம் சொல்லுபவை அல்ல.மாறாக அனுபவ வாயிலாக அறிமுகங்களை தந்து, நம் நினைவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சி.சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டவர்கள் தவறவிடக் கூடா வாசிப்பு!

வெளியீடு - உயிர்மை

Monday, November 8, 2010

The Day I Became A Woman (2000)

ஒரே நாளில் நிகழும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.ஒரு சிறுமி,ஒரு நடுத்தரவயது பெண்,ஒரு மூதாட்டி - தங்களை அடையாளம் கண்டு கொள்ள நேரிடும் ஒரு நாளை குறித்த மூன்று தனிக்கதைகள்.முதல் முறை சுதந்திரம் முடக்கப்படும் பொழுது எழும் கேள்விகள்,விருப்பங்களுக்கு தடை ஏற்படும் பொழுது அதை மீறி வென்றிட நடத்தும் போராட்டம்,பிடிதமானதொரு வாழ்வை இறுதி நாட்களில் கண்டெடுத்து அடையும் மகிழ்ச்சி,இவற்றை இப்பெண்களின் வாழ்வில் ஒரு நாள் நிகழ்வின் மூலம் பார்வையாளனுக்கு சிறப்பாய் கொண்டு சேர்ந்திருக்கிறார் இரானிய பெண் இயக்குனர் மர்சீ மெஷ்கினி.




முதல் கதை, ஹவா என்னும் சிறுமி தனது ஒன்பதாவது பிறந்த நாளின் பொழுது அம்மாவாலும்,பாட்டியாலும் இனி நீ ஒரு பெண் என போதிக்கப்படுகிறாள். சதோர் எனப்படும் கருப்பு அங்கியை அணிந்து கொள்ள அதுவே சரியான நாள் என தீர்மானம் ஆகின்றது.ஆண் நண்பர்களோடு விளையாடவும்,வெளியே செல்லவும் தடை விதிக்கப்படுகின்றது."நேற்று வரை விளையாடி கொண்டுதானே இருந்தேன்" என அவள் கேட்கும் இடம்...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு பகல் 12 மணிவரை விளையாட அனுமதி பெற்று நேரத்தை கணிக்க குச்சியை எடுத்து கொண்டு வெளியேறுகிறாள்.வெகு இயல்பாக வந்து விழும் கேள்விகளும்,நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாத சிறுமியின் மனநிலையை அழகாய் பிரதிபலிக்கும் பகுதி இது.

இரண்டாவது கதை - கணவனின் எதிர்ப்பை மீறி சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொள்ளும் ஆஹு என்னும் பெண்ணை குறித்து.இக்கதை முழுதும் பந்தைய களத்திலேயே நடிக்கிறது.எத்தனையோ பெண்களோடு பந்தயத்தில் பங்கு கொண்டிருக்கும் ஆஹூவிடம் அவளது கணவன் அதை விடுத்து வீடு வருமாறு வற்புறுத்துகிறான்.விவாகரத்து செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறான்...மத குருவை அழைத்து வந்து விவாகரத்தும் செய்கின்றான்..எதையும் கண்டுகொள்ளாமல் இறுக்கமான மனநிலையில் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து சைக்கிள் ஒட்டி செல்லும் ஆஹு தனது சகோதரர்களால் பாதி வழியில் சைக்கிள் பிடுங்கப்பெற்று தனித்து விடப்படுவதோடு முடிகின்றது இக்கதை.மத ரீதியான கட்டுபாடுகள் நியாயமான விருப்பங்களுக்கு இடையூறாய் வந்தால் அதை துணிந்து எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதை சொல்லுவதான கதை.மூன்று கதைகளில் அழுத்தம் மிகுந்தது இதுவே.



மூன்றாவது கதை - தான் அனுபவித்து அறியாத சொகுசான வாழ்கையை இறுதி நாட்களில் சாத்தியப்படுத்திட நினைக்கும் மூதாட்டி ஹூரா,வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் அத்தனையையும் கூலிக்கு சிறுவர்களை வைத்து கொண்டு வாங்கி தன் நகரம் நோக்கி பயணிக்கின்றால். அத்தனை சுவாரஸ்யமான பகுதி இல்லை இது..இருப்பினும் ஹூரா கிளம்பும் முன்னர் அவள் சந்திக்கும் இரண்டு பெண்கள்,ஆஹூவை குறித்து அவளிடம் சொல்லுகின்றனர்,அத்தனை எதிர்ப்பை மீறி அவள் சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொண்டதும்,சகோதரர்களால் சைக்கிள் பிடுங்கப்பட்டு பந்தய களத்தில் தனித்து விடபட்டாலும் அவள் வாடகைக்கும் சைக்கிள் பெற்று அதில் வெற்றி அடைந்துவிட்டாள் என அவர்கள் பேசி கொள்வது பெருத்த நிம்மதி அளிக்கும் செய்தி.இரண்டாம் கதையின் வெற்றியும் அதுவே.

தான் வாங்கிய பொருட்களை படகில் ஏற்றி கொண்டு செல்லும் ஹூராவை பார்த்தபடி சிறுமி ஹவா நிற்பதோடு முடிகின்றது இத்திரைப்படம்.ஆஹூவை போல போராட்ட குணமும்,ஹூராவிற்கு இறுதி நாட்களில் கிடைத்த மகிழ்ச்சியும் நிறைவும் இனி வாழ்க்கையை தொடங்க போகும் சிறுமி ஹவாவிற்கு சாத்தியம் ஆகுமா என்கிற கேள்விகள் தொக்கி நிற்பதென்னவோ உண்மை.தீவிரமான பெண்ணிய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் இத்திரைப்படம் இரானில் சிறிது காலம் தடை செய்யப்பட்டுள்ளது.மத ரீதியான கட்டுபாடுகளை விலக்கி பார்த்தால் இத்திரைப்படம் எல்லா தேசத்து பெண்களும் பொருந்தி வருவதே.

Monday, November 1, 2010

அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே"

"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"

- அ.முத்துலிங்கம்


இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் உடனான நேர்காணல்களின் தொகுப்பிது.சமகால உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டே செல்கின்றன ஒவ்வொரு கட்டுரையும்.மொழிபெயர்ப்பல்லாமல் உரையாடல்களின் நேரடி தமிழ் பதிவு. வாசகனாய் மட்டுமே தன்னை முன்னிறுத்தி எழுத்தாளர்களோடு கொண்ட உரையாடல்களை தொகுத்திருக்கும் அ.முவின் இம்முயற்சி ஆச்சர்யம் அளிப்பது.வாசிப்பின் மீதான தீராக்காதல் மட்டுமே காரணமாய் இருக்கவேண்டும்....நிச்சயமாய் அது மட்டுமே!

சிறுகதை - நாவல் வடிவம்,வாசிக்க விரும்பும் நூல்கள்,எழுதும் முறை,பதிப்பாளர்களுடனான உறவு குறித்தான கேள்விகள் பொதுவாக எல்லா நேர்காணலிலும் கேட்கபடுபவையாக இருக்கின்றன.பதில்களில் தான் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

"The Devil that danced on the water" நாவலின் அசிரியர் அமினாட்டா போர்னோ தமக்கு பிடித்த நூல் என அகராதியை கூறுகின்றார்."கொலம்பஸ் ஒரு நாட்டை கண்டுபிடித்தது போல ஒவ்வொரு புது வார்த்தையும் எனக்கு பெரிய கண்டுபிடிப்பு தான்" என்கிறார்.இத்தொகுப்பில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் புத்தகம் "An Obidient Father",இதன் ஆசிரியர் புலம் பெயர்ந்த இந்தியர் அகில் ஷர்மா.இந்திய அரசியல் பின்னணியில் நிகழும் இந்நாவல் கொண்டாடப்படுவதற்கு, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு மீறிய காரணங்கள் உள்ளன என உணர நாவல் குறித்த சிறு அறிமுகம் உதவுகின்றது. பல்லாயிரம் டாலர் சம்பள வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராய் இருப்பவர் இவர்.


இத்தொகுப்பில் எழுத்தாளர்கள் அல்லாத வேறு சில சுவாரஸ்ய மனிதர்களும் உண்டு.பறவையியல் விஞ்ஞானி கிரிஸ் பிலார்டி உடனான சந்திப்பை சொல்லலாம்,அபூர்வ பறவைகள் குறித்தும்,முற்றிலும் அழிந்து போன பறவை இனங்கள் குறித்தும் தொடரும் உரையாடல்கள் ஒரு நிமிடம் நாமும் அவர்களோடு அந்த பறவை கூடத்தில் நின்று கொண்டிருப்பதான பிரம்மிப்பை தருகின்றது.



"ஒரு விஞ்ஞானக் கதை உங்கள் அறிவை தூண்ட முடியும் அல்லது எதிர்பாராத ஒரு மூளை அதிர்ச்சியை தர முடியும்.ஆனால் இலக்கியம் என்று நீங்கள் அழைக்க வேண்டுமானால் அது உணர்வுபூர்வமாக உங்களை தொட வேண்டும்"

-- டேவிட் பெஸ்மொஸ்கிஸ்


திருக்குறளோடு ஆரம்பமாகும் அத்தியாயங்கள் கொண்ட ஆங்கில நூல் இருக்குமென நாம் நினைத்திருக்க சாத்தியங்கள் இல்லை."Cinnamon Gardens" என்னும் அந்நூலை எழுதி இருக்கும் ஷியாம் சுந்தர் சிங்கள எழுத்தாளர். தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத இவர் திருக்குறளை தேர்ந்தெடுத்ததற்கு சொல்லும் காரணங்கள் சுவாரஸ்யமானவை.அனிதா தேசாயின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கியதாய் கூறுகின்றார்.அனிதா தேசாயின் "கடற்புரத்து கிராமம்"மட்டுமே வாசித்திருக்கிறேன்,வருடங்கள் பல கடந்தும் இன்னும் அந்நாவலின் மனிதர்கள் ஹரியும்,பேலாவும்,கமலாவும் மனதில் இருக்கிறார்கள்.

கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது தொகுப்பில் படித்ததில் பிடித்தது என அ.மு பகிர்ந்திருக்கும் நூல் "Teacher Man". ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற ப்ரான்க் மக்கொர்டின் சுயசரிதை நூல் இது.நகைச்சுவையும்,ஒளிமறைவு அற்ற இவரின் எழுத்து குறித்தும் அந்த கட்டுரையில் வாசித்திருந்தது நினைவில் இருந்தது.வாசித்தே தீரவேண்டிய பட்டியலில் "Teacher man " நூலை சேர்க்க கூடுதலான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளது.எழுத்தில் இருக்கும் வசீகரமும்,நகைச்சுவையும் எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதை சொல்லும் விதமாய் இக்கட்டுரை இவ்வாறாக முடிகின்றது.

"ஒரு எழுத்தை படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என பல சமயங்களில் தோன்றும்.இனிமேல் மக்கோர்டை எங்கு சந்தித்தாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் செல்வேன்.அவர் புத்தகங்கள் எங்கு கண்டாலும் வாங்குவேன்"

காம இலக்கியம் படைக்கும் மேரி ஆன் ஜான் புலம் பெயர்ந்த சிங்களத்தவர்.தனது டைரி குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரும் இவரின் நாவல் "Bodies in Motion ", மிக நுணுக்கமான விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றார். குழந்தையின் உற்சாகத்தோடு இவர் பேசி இருப்பதாய் தோன்றியது.யாழ்ப்பான அப்பம் குறித்து இருவரும் பேசி கொள்ளும் இடம் அதை உறுதி செய்தது.

கிரேக்க புராணம் ஒன்றை (ஓடிசி) மீள் ஆராய்ச்சி செய்யும் மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவல் குறித்த விஸ்தாரமான அறிமுகம் பெனிலோப்பே என்னும் கிரேக்க இலக்கிய பாத்திரத்தின் மீதான மதிப்பை கூட்டுவது.புராணம் ஓடிசியசை பிரதானப்படுத்தி இருந்தாலும்,அவன் மனைவி பெனிலோப்பேவை முன்னிறுத்தி எழுதபட்டிருக்கும் இப்பெண்ணிய நாவலில் வருவதான இவ்வரிகள் என்னை கவர்ந்தன.


"நீ ஒரு தண்ணீர் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை ,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்"


வெகு சில எழுத்தாளர்கள் குறித்து மட்டுமே பகிர்ந்துள்ளேன்.தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் உடனான நேர்காணல் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.முதல் ஆச்சர்யம் தமிழ் மீதான இவருக்கு உண்டான ஆர்வம்..சங்க இலக்கியம் தொடங்கி சமகால தமிழ் இலக்கிய சூழல் வரை தோய்வின்றி பேசுகின்றார்.செம்மொழி மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியது இவர் தான்.

உலக இலக்கியங்கள் குறித்த பேச்சின் ஊடே புதுமைப்பித்தனும், எஸ்.ராவும்,ஜெமோவும் அதை ஒத்த படைப்புகளுக்காய் கோடிட்டு காட்டப்படுவது நிறைவு.ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்,எதிர் கொண்ட இடர்பாடுகள்,குறித்து வாசிக்க வாசிக்க வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது!!அவரவர் படைப்பு சார்ந்த கருத்தாளமிக்க உரையாடல்கள்,எத்தனை தீவிர வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் இது சாத்தியமாக. குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் வாசிப்பதற்கு போதுமான நூல்கள் இத்தொகுப்பில் பரிந்துரைக்கபடுகின்றன.தமிழில் ஆக சிறந்த முயற்சி.தவிர்க்க கூடா வாசிப்பும் கூட.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 125 ரூபாய்

Wednesday, October 20, 2010

La Strada..சபிக்கப்பட்ட காதலியின் கதை

ஜெல்சொமினா,அவள் ஒன்றும் வசீகரமானவள் இல்லை.குள்ளமான உருவம்,கோமாளியை நினைவூட்டும் நடை,ஆண்பிள்ளையை போன்ற தோற்றம்.....இருப்பினும் துடுக்குத்தனமான செய்கைகளும்,அந்த கண்களில் தேங்கி நிற்கும் காதலும்,ஏக்கமும் பார்வையாளனுக்கு அவள் மீது காதலை வரச்செய்துவிடும்.ஜெல்சொமினாவாக நடித்துள்ள கிலியட்டா மசினாவின் அற்புத நடிப்பால் இப்படம் காவியம் ஆகின்றது.இவர் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எனக்கு சாவித்திரியை ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தார்,அதிலும் நவராத்திரி திரைப்படத்தில் பைத்தியம் போல பாவனை செய்யும் சாவித்திரியை.

நாடோடி வித்தைக்காரனான ஜாம்பினோவிடம் சொற்ப பணத்திற்காக விற்கப்படுகிறாள் ஜெல்சொமினா.மார்பை சுற்றி இரும்பு சங்கிலி கட்டி அதை தன் பலம் கொண்டு அறுத்தெறியும் வித்தை செய்யும் ஜாம்பினோ முரடன்,குடிகாரன்,பெண் பித்தன்.ஜெல்சொமினாவிடம் எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் பிரியத்தை காட்டியதில்லை.தொடக்கம் முதல் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் பாவத்திற்குரிய பெண்ணாக கிலியட்டா மசினாவின் நடிப்பு அட்டகாசம்.அவரின் தனித்துவ நடிப்பிற்கு உதாரணமென பல காட்சிகளை குறிப்பிடலாம்.வித்தையின் பொழுது மத்தளம் அடிக்க ஜெல்சொமினாவிற்கு ஜாம்பினோ கற்று கொடுக்கும் காட்சி சிறந்த உதாரணம்,சிறு குழந்தைக்கான உற்சாகத்தோடு அவள் அதை பழக முயல்வதும்,அவனோ அவளை குச்சியால் அடித்து சொல்லி தர,அதை எதிர்பாராத அவளின் முக பாவம்.




ஜாம்பினோ அவளை ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லும் பொழுது அந்த முகத்தில் தோன்றும் ஆவலும் பெருமிதமும்..அவனோ அவளை பொருட்டென மதிக்காமல் அவளை தனியே விட்டுவிட்டு ஒரு வேசியோடு இரவை கழிக்க சென்றுவிடுகிறான்.இரவெலாம் உறங்காமல் அவனிற்காக காத்திருக்கும் ஜெல்சொமினா,காலையில் அவன் இருப்பிடம் அடைந்து, உறங்கி போயிருக்கும் அவன் அருகில்..தான் கண்டெடுத்த தக்காளி விதைகளை உற்சாகமாய் நட்டு கொண்டிருக்கின்றாள்.அற்புத நாடகம் ஒன்றின் உணர்வுபூர்வமான காட்சி போல..ஏமாற்றத்தை,கோபத்தை,வஞ்சிக்க பட்டதை மறக்க முயல்வதை அல்லது மறந்து விட்டதை உணர்த்துவதான காட்சி.

தொடர்ந்து ஜாம்பினோ தன்னை புறக்கணிப்பதை பொருத்து கொள்ள இயலாமல் ஜெல்சினோ ஓர் இரவு அவனை விடுத்து ஓடி வெகு தூரம் வந்து ஒரு நகரை அடைகிறாள்.அங்கு உயரமான கட்டடங்களுக்கிடையே கம்பியை கட்டி,அதில் நடக்கும் மட்டோவின் சாகச நிகழ்ச்சியை ஆச்சர்யத்தோடு காண்கிறாள்.அவளை தேடி வரும் ஜாம்பினோவிடம் தப்பிக்க முடியாமல் மீண்டும் அவனுடன் செல்கிறாள்.இம்முறை ஒரு சர்கஸ் கூட்டத்தோடு இணைந்து செயல் பட அவன் முடிவு செய்கின்றான்.அங்கு மட்டோவும் இருக்கின்றான்..அவளின் பிரியத்திற்குரிய ட்ரம்பட் கருவியை இசைக்க கற்று தருகின்றான் மட்டோ.கோமாளித்தனங்கள் மிஞ்சிய மட்டோ கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் ஜாம்பினோவை கிண்டல் செய்து கொண்டே இருக்கின்றான்.இவனின் சீண்டல் ஒரு நாள் கைகலப்பில் முடிய ஜாம்பினோ சிறை செல்கின்றான்.

அன்றிரவு ஜெல்சொமினாவும் மட்டோவும் கொள்ளும் உரையாடல் முக்கியமானது.ஜாம்பினோவிற்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை அவள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கின்றான்..வாழ்வதற்கு எல்லோருக்கும் ஒரு காரணம் உண்டு.கூழாங்கற்களுக்கு கூட என அவன் பேசி கொண்டே போக...ஜெல்சொமினா ஜாம்பினோவுடன் தொடர்ந்து இருக்க முடிவு செய்கின்றாள்.சிறை இருந்து திரும்பிய ஜாம்பினோ அவளை அழைத்து கொண்டு வேறு நகரத்திற்கு செல்கின்றான்..பயணத்தில் ஊடே அவர்கள் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தங்க நேரிடுகிறது.அன்றிரவு அவனிடம் தன் காதலை சொல்லுகின்றாள்.அதற்கும் அவனிடம் கோபமும்,எரிச்சலுமே பதிலாய் இருக்கின்றது.அங்கிருக்கும் கன்னிகாஸ்திரிகள் முன்பு அற்புதமாய் ட்ரம்பட் வாசித்து காட்டும் ஜெல்சொமினாவை முதல் முறையாக ஜாம்பினோ ஆச்சர்யமாய் பார்க்கின்றான்.




தொடரும் அவர்கள் பயணத்தின் பொழுது மட்டோவை சந்திக்க நேரிடுகிறது.ஜாம்பினோ அவன் மீது கொண்ட கோபத்தில் ஓங்கி அடித்துவிட மட்டோ இறந்து விடுகிறான்.சற்றும் இதை எதிர்பாராத ஜாம்பினோ யாரும் அற்ற அந்த சாலையின் ஓரத்திலேயே அவன் உடலை அப்புறபடுத்தி விட்டு பயணத்தை தொடர்கிறான்.மிரண்ட விழிகள் கொண்டு நிற்கும் காட்சியில் கிலியட்டாவின் நடிப்பு நேர்த்தி.மிட்டாவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் மீள முடியாமல் ஜெல்சொமினா தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.மிட்டா உடனான உரையாடலில் அவன் கூறியதையே திரும்ப திரும்ப கூறி பிதற்றும் அவளால் எங்கே தான் மாட்டி கொள்ள நேரிடுமோ என்று ஜாம்பினோவிற்கு பயம் வந்துவிடுகின்றது.

ஓய்வெடுக்க ஒதுங்கிய சாலையோரம், அவள் புலம்பி கொண்டே உறங்கி போக.ஜாம்பினோ அவளை தனியே விட்டு விட்டு செல்கின்றான்.சொல்லவியலா துக்கத்தை தாங்கியபடி உறங்கி போகும் ஜெல்சொமினாவை கடைசியாய் நாம் பார்ப்பதும் அப்பொழுது தான்.மனதை கிழிக்கும் சூனியமான நிசப்தத்தை போன்றதொரு காட்சி அது.சில வருடங்கள் கழித்து..கடற்கரை சாலை வழி நடந்து செல்லும் ஜாம்பினோ ஜெல்சொமின இசைக்கும் அதே பாடலை கேட்கின்றான்..அப்பாடலை பாடிய பெண்ணின் மூலம் ஜெல்சொமினா பைத்தியமாய் திரிந்து இறந்து போனதை அறிந்து கொள்கின்றான். குற்ற உணர்ச்சி பீடிக்க பெற்று..கடற்கரையில் அலையும் ஜாம்பினோ,சோகம் தாளாமல் பெருங்குரல் எடுத்து அழுவதோடு படம் முடிகின்றது.

கிலியட்ட மசினாவின் நடிப்பிற்கு அடுத்த படியாய் ஜாம்பினோவாக நடித்துள்ள அந்தோணி கொயினின் நடிப்பு குறிப்பிடும்படியானது.ஊருராய் சுற்றி அலையும் ஜிப்சியிடம் அதீத பிரியத்தையோ,காதலையோ எதிர் பார்க்க முடியாது.சலிப்பு தரும் தனது அன்றாடங்களில் இருந்து விடு பட அவன் உணர்ச்சியற்ற நிலையை தேர்ந்தெடுப்பதாய் தோன்றியது.கச்சிதமான நடிப்பு இவருடையது.காதலை யாசித்து நிற்கும் அபலை பெண் ஜெல்சொமினாவாய் கிலியட்டா மசினா,எந்த ஒரு காட்சியிலும் கவனம் இவரை விட்டு அகலவில்லை. பார்வையாளன் ஜெல்சொமின மீது கொள்ளும் காதலும்,பரிதாபமும் இவரின் தனித்துவமான நடிப்பால் மட்டுமே சாத்தியமாகின்றது.

Monday, October 18, 2010

பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்"

சுயசரிதை எழுத்திற்கு ஒளிவு மறைவு இருத்தல் கூடாது என்று அ.முத்துலிங்கம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பார்.அவ்வாறான எழுத்தே வாசகனுக்கு நம்பதன்மையையும், எழுத்தாளன் கூட்டி செல்லும் உலகத்தினுள் அந்நியோனியமாய் உலவும் ஆற்றல் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்" அவ்வாறான சுயசரிதை.புதைந்து போன இசை கருவிகளை தோண்டி எடுக்கும் மனநிலை எவ்வாறிருக்கும்?!மீண்டும் அதன் இசையை கேட்க எழும் ஆர்வம்,கிடைக்காமல் போனால் அடைய நேரிடும் ஏமாற்றம்,ஏற்கனவே அது தந்து போன இசை மயக்கம் என்பது போன்ற கலவையானதொரு மனநிலைக்கு இட்டு செல்லுகின்றது இந்த தொகுப்பு.

வறுமையின் பிடியில் சிக்கி பரதேசியாய் அலைந்த காலம் தொடங்கி நோபல் அரங்கம் சென்றது வரை, வெவ்வேறு சந்தர்பங்களில் தான் சந்தித்த மனிதர்கள் குறித்த ஒரு கவிஞனின் நேர்த்தியான சுயசரிதை இது.வாசிக்க வாசிக்க ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.வாசித்து முடித்ததும், இவர் வாழ்வின் எல்லா சம்பவங்களையும் பார்த்திருப்பாரோ என தோன்றியது.தனது வாழ்வனுபவங்களை கொஞ்சமும் கூட்டாமல், குறைக்காமல் வாசகனுக்கு அப்படியே தந்திருக்கின்றார்.



இந்நூலில் இவர் பகிர்ந்திருக்கும் நினைவுகளில், ஆண்களை விட பெண்களே வசீகரமானவர்கள்.சாஹீனா,சூன்யமாகி போன வாழ்கையின் துரத்தலில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்று தோற்றவள்.தீக்காயங்கள் கொண்டு விகாரமாய் தோற்றம் அளிக்கும் சஹீனாவை எதிர்பாராமல் ரயில் பயணத்தில் சந்திக்கும் பாலசந்திரன்,அவளோடான தனது கடந்த கால காதலை மீட்டெடுத்து பின் மெல்ல நிகழின் அதிர்வில் இருந்து விலகுவது நெகிழ்வான விவரிப்பு.

"கண் ஜாடையாலே பாவக்கடலின் சூழலில் ஆழ்த்தும்
பெண்கள் புழுவால் தின்னப்பட்டு உதிர்ந்துபோவார்கள்"


இவ்வரிகளுக்கு அட்சரமாய் பொருந்தி போகும் லைலா என்னும் பெண்ணோடான பாலாவின் உரையாடல்கள் கோபியின் டேபிள் டென்னிஸின் சிறு பகுதியை வாசித்தது போல இருந்தது.கடற்கரை மணலில் சாந்தம்மா என்னும் வேசியுடன் துயரத்தை பங்கிட்டு, பாடி கழித்த இரவு,சர்வதேச புத்தக சந்தை ஒன்றில் காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை தேடி அலைந்த தென் ஆப்பிரிக்க மூதாட்டியுடனான உரையாடல்கள்,கண்களில் மின்னலிட்டு சிரிக்கும் ராதிகாவின் மீது மோகித்திருந்த நாட்கள் - தொடர்ச்சியான அவளின் மரணம், மருமகளின் கொடுமை தாளாது தினம் ஒரு வேஷம் கட்டி யாசித்து அலைந்த முதியவள் என எல்லாவிதமான பெண்களும் உலவுகின்றனர்.

சிவாஜியுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு ஏற்கனவே இலக்கிய இதழ்களில் வெளிவந்து பேசப்பட்ட கட்டுரை.அதி உன்னதமான எழுத்தாளனை கூட சிறு பிள்ளையின் ரசிக மனநிலைக்கு மாற்றிவிடும் மந்திரத்தை சினிமா கொண்டுள்ளது.சிவாஜியை அவர் வீட்டில் சந்தித்தது குறித்து அந்த நேரத்தின் ஆச்சர்யம் விலகாமல் பகிர்ந்துள்ளார்.கமலா தாஸ் உடனான சந்திப்பு கவிதை சார்ந்த உரையாடல்கள் பற்றி அல்லாது, அவரின் பிரியமும்,அக்கறையும் உள்ள தயாள குணத்தை பறைசாற்றுவதானது.

பிரியத்திற்குரிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பிறகு பைத்தியகாரனாய் காண நேர்ந்த அவலமும்,பணம்-உறவுகளை துறந்து கடவுளின் சந்நிதியில் முழுதுமாய் தங்களை அர்ப்பணித்து கொண்ட தம்பதியரை கண்டு நெகிழ்ந்த சந்தோஷ தருணமும் பாலச்சந்திரனுக்கு அமைந்திருக்கின்றது.ரத்த வங்கியில் மோசமானதொரு சூழ்நிலையில் நண்பன் ஆகி போன கிருஷ்ணன் குட்டி,தரித்திரத்தின் பிடியில் இருந்து விலக முடியாத அற்புத கவிஞன் ஸ்ரீவத்ஸன் என பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி செல்லும் ஒவ்வொரு மனிதரும் நமக்காய் பெருங்கதை ஒன்றை வைத்திருக்கின்றார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு - கே.வி.ஷைலஜா
வெளியீடு - காவ்யா (2002 )

Sunday, October 10, 2010

இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....



"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."

-- வண்ணதாசன்



தேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ....கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த ஓவியங்கள் தனுவும், சின்னுவும்,லீலாக்காவும்,சிறு மலரும்....கடல் மணலில் கால் புதைத்து சிப்பிகளை தேடி அலையும் சிறுமியின் மனநிலையில் வந்து விடுகின்றது வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் பொழுது.


வண்ணதாசனின் சமீபத்திய தொகுப்பான "பெய்தலும் ஓய்தலும்" வாசித்து முடித்ததும்,"சின்னு முதல் சின்னு வரை" வாசிக்க வேண்டும் போல இருந்தது.மிகப்பிடித்த குறுநாவல் அது.சின்னு குறித்து மிகவும் குறைவாகவே தெரிவிக்கபட்டிருக்கும்,முற்று பெறாத கவிதையை தந்து இஷ்ட சொற்கள் கொண்டு முழுமைபடுத்திக்கொள் என விட்டுவிடுவது போல.இந்நாவல் பேசுவதெல்லாம் குறுகி வரும் மனித மனப்பான்மைகள் குறித்து!கணவனை இழந்த சின்னு,அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருப்பதை,சகிக்க முடியாத குற்றமென கொள்ளும் பொதுப்பார்வையை முன்வைத்து பின்னபட்டிருக்கும் கதை.நெற்றியில் விழும் சுருள் முடியை ஒதுக்கியபடி சின்னு அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் என்பதான முதல் வர்ணனையே இப்போதும் சின்னு குறித்து யோசித்தால் நினைவிற்கு வருகின்றது...!

இந்நாவலை முதல்முதல் வாசித்தது ஒரு வேனிற்கால பகலில்.பொதுவான கற்பிதங்களுக்கு பழகி போய்விட்ட மனிதமனங்கள் அத்தகைய பொழுதொன்றின் புழுக்கத்திற்கு ஒப்பானவையே.

'நகரத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்' சிறுகதையின் நாயகன் தாஸ்,அலுவலகத்தில் மின்விசிறி கொஞ்ச நேரம் இயங்காவிட்டாலும் கூப்பாடு போடும் தாஸ் குறித்த தொடர் விவரிப்புகள் சுவாரஸ்யத்தை மீறிய எதார்த்தங்கள்...நைந்து போன விசிறியோடு இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாஸ் போன்றவர்களை நிச்சயம் ஒருமுறையேனும் சந்தித்திராமல் இருந்திருக்க முடியாது.வீட்டில் நிலைமை தலைகீழாய் இருக்க,பொது இடங்களில் வேறுவிதமாய் வெளிக்காட்டி கொள்ளும் இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல மாறாக இயல்பே அதுவென சிறு புன்னகையோடு கடந்து செல்ல வேண்டியவர்கள்.

தனுவை குறித்து இன்னும் என்ன பேச?!!மௌனியாய் இருந்து கொண்டே அவனுள் காதல் வளர்க்கும் அந்த சிறுபெண்ணை குறித்து யோசித்தால்..மழை நனைத்த சாலையும்..வாதாம் மரங்களுமே முன்வருகின்றன."தனியாகி..தனுவாகி.." என அவனோடு சேர்ந்து கரைந்து போக செய்பவள்.நடுகையில் வரும் அந்த கிழவர்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லியை போன்றதொரு பாத்திர படைப்பு.அவரின் தர்க்கங்கள்.. செடிகள் மீதான தீராக்காதல்..."ஒண்ணை பிடிங்கினால் ஒண்ணை நடணும் .." என கூறும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட துளசி வாசனை.


"கூடு விட்டு" கதையில் வரும் லீலாக்கா, "அதெப்படி மறக்கும்,நீங்க சொன்னதை ஒரு சொட்டு விடாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்" என்கிறாள் ஒரு இடத்தில்.."கையில் கோலப்பொடி இருக்கு,இல்லாட்டி உன் வண்டி ஹார்ன் சத்தத்தை பந்தை பிடிப்பது போல ரெண்டு கையிலயும் பிடித்து இருப்பேன்" என்கிறாள் வேறொரு சந்தர்ப்பத்தில்."கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு..சில்லு சில்லா தெரிச்சு பட்டாசலைல கிடக்கு.நீ வந்திருந்தா உன் காலில் பூந்திருக்கும்" என்பவளை எதனோடு ஒப்பிடுவது..


"இந்த சாதாரண வாழ்வின் மத்தியில் காதல் தான் சில
தேவதை கதைகளை சொல்லி செல்கிறது"


"ஒரு முயல் குட்டி இரண்டு தேநீர் கோப்பைகள்" கதையில் வரும் சிறுமலர் அப்படி ஒரு தேவதையே.நட்பின் எல்லை எதுவென தீர்மானிக்க முடியாத நிலையில் நிகழும் சங்கடங்களை மெலிதாக அணுகி இருக்கும் இக்கதை கோபியின் சிறுகதை ஒன்றை நினைவூட்டியது.'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையில் வரும் செல்வி,எல்லா கடல் மீதும் பறந்து விட்டு உப்பு கரிக்கும் சிறகோடு ஓய்வெடுக்க வரும் பறவையோடு தன்னை ஒப்பிட்டு கொள்கின்றாள்.சபிக்கப்பட்ட காதலி தேவதையாய் உருமாறும் கதை.

வண்ணதாசன் கைமாற்றி விட்டிருக்கும் பட்டுப்பூச்சிகள் இன்னும் எத்தனையோ..பொலிவற்ற நகர ஓட்டத்தின்,பதற்றம் நிரம்பிய முகங்களுக்கு மத்தியில் இந்த பட்டுபூச்சிகளின் தேவை அவசியமானது என்பதில் சந்தேகமில்லை..


சின்னு முதல் சின்னு வரை - விமலன் புக்ஸ் வெளியீடு(1991 )
வண்ணதாசன் கதைகள் - புதுமைப்பித்தன் பதிப்பகம்
பெய்தலும் ஓய்தலும் - சந்தியா பதிப்பகம்

Monday, September 27, 2010

அகிராவின் 'DREAMS'

கனவுகளில் மட்டுமே எல்லாமும் சாத்தியம்.சமீபத்தில் ஒரு கனவு,கலைந்த மேகங்களுக்குள் ராட்சச பரமபத கட்டங்கள்,அதன் உள்ளிருந்து மெதுவாய் வெளி வரும் நிலா...பொதுவாய் கனவுகள் வருவது அரிது,அப்படியே வந்தாலும் சட்டென நினைவை விட்டு உதிர்ந்து விடும்.இது அப்படி அல்ல நீண்ட நேரம் கனவை குறித்து யோசித்து கொண்டிருந்தேன்.கனவுகள் தோற்றுவிற்கும் புதிர்களை விடுவிக்க எல்லா சமயமும் முடிவதில்லை.

இத்திரைப்படத்தை அகிரா தனது கனவுகளின் தொகுப்பாய் குறிப்பிடுகிறார்.எட்டு கனவுகளுக்கு(கதைகளுக்கு) வெகு நேர்த்தியாக வண்ணம் தீட்டி உள்ளார் அதே சமயம் அதிக பொறுப்புடனும்.உலகம் முழுதும் அங்கீகரிக்கபட்ட ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய பொறுப்பை மிக சரியாய் இத்திரைப்படத்தில் அகிரா வெளிகாட்டி உள்ளார் என தோன்றியது.அழிந்து வரும் இயற்கை வளங்களை குறித்தும்,போரினால் ஏற்படக்கூடும் விபரீதங்கள் குறித்தும்,அணுசக்தியின் அபாயம் குறித்தும் பேசும் கதைகள் இவை.

வண்ண சிதறல்களாய் பெரும்பாலான காட்சிகள்.பூக்களும்,மரங்களும்,ஓவியங்களும் கூட நம்முடன் உரையாடுவது போன்ற தோற்றம். பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டுகின்றது.



"Sunshine Through The Rain ",வெயிலோடு மழை பெய்தால் நரிக்கு கல்யாணம் என்னும் நாடோடிக்கதை கதை இங்கும் உள்ளதே.அப்படி ஒரு மழை நாளோடு தொடங்குகின்றது இக்கதை..மழையை வேடிக்கை பார்க்கும் சிறுவனை அவனது தாய், வெளியே சென்று நரியின் கண்ணில் அகப்பட்டால் அது கோவம் கொண்டு கொன்று விடும் என எச்சரித்து செல்கின்றாள்.அவள் பேச்சை கேளாமல் காட்டுக்குள் சென்று ஒளிந்திருந்து நரியின் திருமண கொண்டாட்டத்தை பார்க்கின்றான் சிறுவன்.பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் நரிகள் திருமண கோலாகலம் படமாக்கபட்டுள்ள விதம் அருமை.அவன் எதிர்பாரா சமயம் அவை அவனை கண்டு கொள்ள வீட்டிற்கு ஓடி வரும் சிறுவனிடம்.நரிகள் கோபம் கொண்டு அவனை தேடி வந்ததாகவும்,அவனை அவனே கொன்று கொள்ள கத்தியை கொடுத்து சென்றதாகவும் சொல்லி..மேலும் அவற்றின் கோபத்தை தணிக்க நேரில் சென்று மன்னிப்பு கோரி வருமாறு அவனை திருப்பி அனுப்புகிறாள் தாய்.....நரிகள் இருப்பிடம் தேடி ,அடர்ந்த மலர் தோட்டத்தில் வானவில்லிற்கு கீழ் அச்சிறுவன் நிற்பதோடு கனவு முடிகின்றது.


"The Peach Orchad ",பீச் மரங்கள் பூத்து குலுங்கும் பருவத்தில் கொண்டாடப்படும் பொம்மை திருவிழா நாளில்,சிறுவன் ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியேறி ஓடும் அறிமுகமற்ற சிறுமியை பின்தொடர்ந்து செல்கின்றான்..அவனுக்காக அங்கு காத்திருப்பவர்கள் பீச் மரணத்தின் ஆத்மாக்கள், அவன் வீட்டு பொம்மைகளின் சாயலில்..அப்பகுதியின் பீச் மரங்கள் அழிந்ததிற்கு அவன் குடும்பமே பிரதான காரணம் எனக் கூறி அவனை தண்டிக்க போவதாய் அவை சொல்ல..சிறுவன் அழுது கொண்டே பீச் மரங்களின் மீதான தனது பிரியத்தை கூறுகின்றான்.அதில் நெகிழ்ந்து போய் அந்த ஆத்மாக்கள் அற்புத நடனத்தோடு பூத்து குலுங்கும் பீச் மரங்களை கடைசியாய் பார்க்க வாய்ப்பளிக்கின்றன...அழிந்து வரும் இயற்கை வளங்கள் குறித்து மரங்களின் மூலமே உணர்துவதான இக்கனவு நேர்த்தியான வர்ணங்களினால் அற்புதமாக காட்சியமைக்கபட்டுள்ளது.இக்கனவிற்கான வண்ணம் பீச்.

"The Blizzard ",இக்கனவிற்கான வண்ணம் வெள்ளை.அடர் பணியில் சிக்கி தவிக்கும் நான்கு மலையேற்ற வீரர்கள் பணி புயலில் சிக்கி இருப்பிடம் கண்டு கொள்ள முடியாது கொஞ்ச கொஞ்சமாய் தங்களின் நம்பிக்கையை இழந்து,மரணத்திற்கு தயாராகும் பொழுதில் அக்குழுவின் தலைவன் எங்கிருந்தோ வரும் தேவதையின் வதையில் சிக்கி பின்பு மயக்கத்தில் இருந்து தெளிவடைந்து பின் தங்களின் இருப்பிடம் மிக அருகில் இருப்பதை கண்டு கொள்வதான இக்கனவு கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்தியது."The Tunnel ", போரில் இறந்த ராணுவ வீரர்கள் உயிர்பெற்று வந்தால்..அவர்களின் கேள்விகளுக்கு விடை தேட முயலும் கனவு..தங்களின் குடும்பம் குறித்த நிறைத்த கவலையும்,மேலும் தங்களின் மரணம் போலியானது என்றும் நம்பி கொண்டிருக்கும் தனது படைவீரர்களின் ஆத்மாக்களோடு உரையாடும் படைத்தளபதி..அவற்றை சமாதானம் செய்து,போரின் மரணம் ஏற்பட்டதிற்கு மன்னிப்பும் கேட்டு விடைபெறுகின்றான்.இக்கனவிற்கான வண்ணம் நீலம்.



"The Crow",ஓவியங்கள் காட்சியாய் மாறுவதும்,காட்சிகள் ஓவியமாய் உருப்பெறுவதும்...நாயகன் ஓவியங்களுக்குள்ளாகவே நடமாடுவதும் என இக்கனவு தோற்றுவித்த மாய வலையில் இருந்து வெளிவர நேரம் பிடித்தது.Visual Treat என்பதற்கு முழுமையான அர்த்தத்தை இதில் உணரலாம்.வண்ணங்கள் கொண்டு கண்ணிறை காட்சிகளை சாத்தியபடுத்தி இருக்கின்றார் இயக்குனர்.வளர்ந்து வரும் ஓவியன் தனது அபிமான ஓவியரை ஓவியத்திலே தேடத் தொடங்கும் பயணம் வண்ணங்களின் உதவியுடன் அதி சுவாரசியமாகின்றது."Mount Fuji In Red" ,மிகப்பெரும் அணுசக்தி கூடம் ஒன்று வெடித்து சிதறினால் ஏற்படும் விளைவுகள் எத்தனை கொடூரமானது என்பதை ஓங்கிய குரலில் முன்வைக்கும் கனவிது.மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவனுக்கே எதிரியாய் திரும்பும் அபாயம் குறித்த எச்சரிக்கையை முன்வைக்கும் இக்கனவிற்கான வண்ணம் சிகப்பு.

"The Weeping Demon ",ஆள்அரவம் அற்ற தரித்திர பூமி ஒன்றில் உலவும் நாயகன்,தலையில் ஒற்றை கொம்புடைய விசித்திர மனிதனை சந்திக்கின்றான்.அணுசக்தி பயன்பாட்டால் மரங்களும்,பூக்களும் முற்றிலுமாய் அழிந்து தங்களின் இனமும் பசியால் ஓலமிட்டு அலைவதை அழுகையுடன் பகிர்ந்து கொள்ளும் அம்மனிதனின் அழுகுரல் மோசமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மனித குலத்திற்கான அழுத்தமான எச்சரிக்கை.இக்கனவிற்கான வண்ணம் கருப்பு.

"Village Of The Water Mills ",அழிந்து வரும் வளங்கள் குறித்த ஏக்கங்களையும்,அறிவியலின் பிடியில் சிக்கி அல்லலுரும் சமூகத்தின் மீதான கோபத்தையும் தாங்கி வந்த பிற கனவுகளை போலல்லாமல்,முற்றிலுமாய் இயற்கையை சார்ந்து இருக்கும் மாதிரி கிராமம் ஒன்றை பற்றியது இக்கனவு. பச்சை தாவரங்களும்..தண்ணீர் சலசலக்கும் ஓடையும்..நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்களும்,சின்ன சின்ன நம்பிக்கைகளும் என அந்த கிராமம் குறித்த செய்திகள் யாவும் ஒரு வயதானவரின் வாக்குமூலமாக வருகின்றது.(வயோதிக)மரணத்தை கூட அம்மக்கள் துக்கம் இன்றி நல்ல முடிவென்று எண்ணி கொண்டாடும் மனநிலை கொண்டிருப்பதாக காட்டி இருப்பது நேர்த்தி.பிற கனவுகளில் முன்னிறுத்தப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் இக்கனவில் விடை உள்ளது.

Monday, September 6, 2010

அகிராவின் "RASHOMON"

"Japan does not understand very well that one of its proudest cultural achievements is in film" - Akira Kurosawa


எந்த திரைப்படத்தையும் இத்தனை நுணுக்கமாய் இதற்கு முன்னர் நான் அணுகியதில்லை.பார்வையாளனுக்கு நேரடியாவும்,மறைமுகமாகவும் தன் படங்களின்
மூலம் முழுமையான சினிமாவை குறித்த அத்தனை நேர்த்திகளையும் அகிரோ கற்பிப்பதாகவே தோன்றியது.ஒரு கொலையை பல்வேறு கோணங்களில் அணுகி இருக்கும் இத்திரைப்படம் முடிவை பார்வையாளன் வசம் விட்டுவிடுகின்றது.சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுயநலமாய் மாறிப்போக தயங்காதது மனித மனங்கள் என உணர்த்துவதான கதை.இசையும்,ஒளிப்பதிவும்,காமிரா கோணங்களும் காட்சிகளுக்கு மேலும் அர்த்தம் கூட்டுகின்றன.

பெருமழை நேரத்தில்,சிதைந்த கட்டிடம் ஒன்றில் ஒரு துறவியும் விறகுவெட்டியும் தாம் நீதிமன்றத்திற்கு சாட்சியாய் போன ஒரு கொலை குறித்து அதிக மன அழுத்தத்தோடு புலம்பி கொண்டிருக்கும் காட்சியோடு படம் தொடங்குகின்றது.அவ்விடம் வரும் மூன்றாவது மனிதனிடம் தாங்கள் கூறிய சாட்சியத்தையும்,கேட்ட சாட்சியங்களையும் கூறுகின்றனர்.
மழையினால் காட்சிகளுக்கு இத்தனை அழுத்தம் கூட்ட முடியும் என முதல் முறை உணர செய்த படம் இது.

காட்டு வழி பயணம் மேற்கொள்ளும் சாமுராயை கொலை செய்து அவன் மனைவியை கற்பழித்து விட்டதாக பாண்டிட்(வழிப்பறி கொள்ளையன்) மீது நீதி மன்றத்தில் புகார் சொல்லபடுகின்றது.கொலைக்கான சாட்சியங்களான பாண்டிட்,சாமுராயின் மனைவி,சாமுராய்(ஆவி ஊடகம் மூலம் பெண்ணொருத்தியின் உடலில் புகுந்து சாட்சியம் சொல்லுகின்றான்) மற்றும் விறகுவெட்டி ஆகியோர் நீதி மன்றத்தில் தங்களின் சாட்சியத்தை சொல்லுகின்றனர்...ஒவ்வொருவரும் ஒரு விதமாய்.எதிலும் நம்பத்தன்மை இல்லை.இதில் பாண்டிட் அவள் மனமுவந்து தன்னோடு வர சம்மதித்து கணவனை கொலை செய்ய தூண்டியதாய் கூறுகின்றான்.அப்பெண்ணோ கணவனின் நிலையை பொறுக்க முடியாமல்,குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பாண்டிட்டுடன் அவனை வாள் சண்டை இட சொன்னதாய் கூறுகிறாள்.சாமுராயின் ஆவி மனைவி மீது பலி சுமத்துகின்றது.கொலையை நேரில் கண்டதாக சொல்லும் விறகுவெட்டி நீதி மன்றத்தில் அதை முற்றிலுமாய் மறைக்கின்றான்.



சாட்சியங்களும் யாவும் பார்வையாளனிடம் நேரடியாக பேசுகின்றன. விறகுவெட்டியும்,துறவியும் பிற சாட்சியங்களின் பொழுது பார்வையாளர்களாய் வீற்றிருக்கின்றனர்.எல்லா காட்சிகளும் திறந்த வானத்தின் கீழ் நடப்பதாகவே உள்ளன.நீதிமன்ற மற்றும் சாமுராயின் கொலை சம்பவ கடந்த கால காட்சிகள் வெயிலிலும்,இது குறித்து விறகுவெட்டியும்,துறவியும் வேதனையோடு உரையாடும் நிகழ கால காட்சிகள் மழையிலும் நிகழ்கின்றன.படத்தின் ஓட்டத்தில் இயற்கையும் பெரும்பங்கு வகிக்கின்றது.வன்மமும்,சுயநலமும்,பொய்யும்,பேராசையும் நிறைந்ததான கடந்த கால காட்சிகள் வெயிலின் உக்கிரம் கொண்டு உணர்த்தபடுகின்றன.அதற்கு முற்றிலும் எதிர்மறையாய் நிகழ கால காட்சிகள்,அன்பு நிறைந்த வாழ்க்கை குறித்து அதிக அக்கறை கொள்ளும் துறவி மற்றும் விறகு வெட்டியின் மனங்களை மழையினால் உணர்ந்துகின்றன.

சாமுராயின் கொலை குறித்தான மர்மம் கடைசி வரைக்கும் நீடிக்கின்றது.ஒவ்வொரு சாட்சியத்தின் கதையிலும் மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முயன்று பார்வையாளன் தோற்கின்றான்,அதுவே அகிராவின் வெற்றி என தோன்றுகின்றது.அன்பு நிலைத்திருக்க சுயநலமும்,நேர்மையற்றதனமும் முற்றிலும் நீங்க வேண்டும் என்பதை கலை நேர்த்தியோடு சொல்லும் இத்திரைப்படம் தந்த பிரம்மிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. முழுமையானதொரு திரைப்படத்தை பார்த்த திருப்தி.

Wednesday, August 18, 2010

சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு

"எந்த கழிவிரக்கத்தையும் கோராமல்,படித்து முடித்த பின் ஒரு பெண் மருத்துவரின் அறைக்குறிப்புகள் போலல்லாமல் நிதர்சனமாக முழுச் சுதந்திரதோடும் மேன்மையாகவும் வாழ ஆசை படும் பெண்களில் இரண்டு சதவிகித பேர் தவிர மீதமிருக்கும் பெண்களின் நிலை தான் மீராவின் கதாபாத்திரங்கள்"

- ஷைலஜா


மலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.



"செய்திகளின் நாற்றம்",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய் இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு முழுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.


"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்"

"அர்த்த ராத்திரிகளின் அலறல்" மற்றும் "இதயம் நம்மை ஆதரிக்கின்றது" ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்."இறந்தவளின் கல்யாணம்",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின் முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு குறியீடு.

இத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை "மோக மஞ்சள்".மருத்துவமனையில் சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.

அளவாய் செதுக்கப்பட்ட
கண்ணாடி தொட்டிக்குள்
கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன்
தினம் தினம் அக்கறையோடு
சுத்தம் செய்யபடும் தண்ணீர்.
பதப்படுத்தப்பட்ட செடி கொடிகள்
தேடி அலையாமல் வாய்க்குள்
வந்து விழும் உணவு
தேவையை சரியாய் புரிந்து கொண்டு
அளிக்கப்படும் பொழுதுபோக்குகள்
என் இருத்தல் பார்ப்பவர்களுக்கு
நான் கொடுக்கும் சந்தோசம்
அழகாய் வளைந்து நெளிந்து
பொன்னிறத்தில் மின்னி
வாலசைத்து தலையசைத்து
சந்தோசம் காட்டுவதாய்
எல்லா சுதந்திரங்களோடும்
எவ்வித சுதந்திரமுமின்றி


ஆசிரியர் - கெ.ஆர்.மீரா
தமிழில் - கே.வி.ஷைலஜா
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

Monday, August 9, 2010

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்" - சிறுகதை

"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது"

- வண்ணநிலவன்

அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்."கடைசியாய் தெரிந்தவர்",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.

"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது"





குறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,

"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்.."டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்?" என நர்சிடம் விசாபார்கள்"............"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று"

நண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நுட்பமாய் பகிர்கின்றது.

இச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து "வசந்தா இப்போ எங்கே இருக்கா?" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து "ஜபல்பூரிலே.." சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.

"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்" என முடிகின்றது இச்சிறுகதை.

திடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எது?அன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.

இவ்வேளையில் எஸ்.ராவின் "பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும்.

வண்ணதாசன் கதைகள்
வெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Saturday, August 7, 2010

கவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி

Sunday, August 1, 2010

மஜித் மஜிதியின் "பெடார்"



துரோகங்கள் தான் எத்தனை வகை..ஒரு சிறுவனின் உலகினுக்குள் அது நிகழும் பொழுது எழும் சொல்லவியலா மனப் போராட்டத்தை நேர்த்தியாய் வடித்திருக்கும் படம் "பெடார்"(Father).சாலை விபத்தொன்றில் தந்தையை இழக்கும் சிறுவன் மெஹருல்லா தன் தாயையும்,தங்கைகளையும் காப்பாற்ற கிராமத்தை விட்டு பெருநகர் ஒன்றிற்கு பணிக்கு செல்கின்றான்.திரும்பி வரும் ஒரு நாளில்,நண்பன் லத்தீப்பின் மூலம் தனது தாய் மறுமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்கின்றான்.பணத்தின் பொருட்டே தாய் அவ்வாறு செய்திருக்க கூடும் என எண்ணி அவள் மீதும்,அவள் மணம் புரிந்துள்ள போலீஸ் அதிகாரியான புதிய தகப்பனின் மீதும் கோவமும்..வன்மமும் கொள்ளும் மெஹருல்லா நண்பன் லத்தீப்பின் துணை கொண்டு சிறுபிள்ளைதனத்தோடு தனது எதிர்ப்பினை காட்டுகின்றான்.

மெஹருல்லா மற்றும் லத்தீப்பாக நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு அபாரம்.முக்கியமாய் மெஹருல்லாவாக நடித்துள்ள ஹசன் சதேகி,இறுக்கமான முகத்தோடு..துரோகத்தின் வலியை வெளிக்காட்டாது,பிடிவாதாமான மனநிலையை ஒரு காட்சியிலும் தவறவிடாது நடித்துள்ளது வெகுநேர்த்தி.இச்சிறுவனின் நடிப்பிற்காகவே படத்தை மறுமுறை பார்க்கலாம். லத்தீப்பாக "பாரான்" திரைப்படத்தின் நாயகன்.அதே வெகுளி சிரிப்போடு ஒரு கிராமத்து சிறுவனை கண் முன் நிறுத்துகின்றான்.நண்பனுக்காய் ஓடி ஓடி உதவுவதாகட்டும்,பின்பு பயந்து பதறுவதாகட்டும் மறக்கவியலா நடிப்பு.சில முகங்கள் காரணம் அற்று பிடித்து போய்விடுவதுண்டு இவனது போல.

தாயோடு சேராது,தனது பூர்வீக வீட்டை லத்தீப்பின் உதவி கொண்டு புதுப்பித்து அதில் தங்கைகளை கடத்தி வந்து வைத்து கொள்ளும் மெஹருல்லா,அவர்களை தேடி வரும் தந்தையிடம் பேசாது தன் கோபத்தை மௌனத்தால் வெளிக்காட்டுவது,மறுமணம் செய்து கொண்டது,பணத்திற்காக தானே எனக்கூறி தாயிடம் பணத்தை வீசி எறிந்து வாதிட்டு அடிவாங்குவது,தங்கைகளை மடியில் அமர்த்தி கொஞ்சுவது,பெருமழைநாளில் அவர்கள் வீட்டில் கல்லெறிந்து,தோட்டத்தை நாசம் செய்வது என முன்பாதி காட்சிகள் யாவும் மெஹருல்லா அவன் குடும்பத்தின் மீதி கொண்டிருக்கும் அளவற்ற பிரியத்தை,இறந்த தன் தந்தையின் இடத்தை வேறொருவர் இட்டு நிரப்ப இயலும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத மனநிலையை உணர்ந்திட போதுமானாதாய் இருக்கின்றன.



மெஹருல்லா தனது புது தந்தையிடம் கொண்டிருக்கும் கோவமும்,வன்மமும் அர்த்தமற்றது என்பது அவரை அறிமுகம் செய்யும் (லத்தீப்பின் தங்கைகளை மடியில் அமர்த்தி உணவு உண்ணும் காட்சி) முதல் காட்சியிலேயே உணர்த்தபடுகின்றது.அந்த முரட்டு சிறுவனின் கோவத்திற்கு ஈடு கொடுக்க இயலாது மன உளைச்சல் கொள்ளும் தருணங்களை,உணர்ச்சி குவியலாய் வெகு நேர்த்தியாய் வெளிக்கொணர்ந்திருக்கின்றார் தந்தையாய் நடித்துள்ள முஹமத் கசெப்.மேஹருல்லாவின் தாயை அவர் மணம் முடித்து,அவளின் குழந்தைகள் குறித்தும்,அவர்களின் எதிர்காலம் குறித்தும் மகிழ்ச்சியோடு அவர் உரையாடும் ப்ளாஷ் பேக் காட்சி நெகிழ்ச்சியானது.போலீஸ் அதிகாரியான இவரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் நகரத்திற்கு ஓடிவிடும் மெஹருல்லாவை தேடி இவர் மேற்கொள்ளும் பயணத்துக்கு பிறகான காட்சிகள் முக்கியமானவை.

மோட்டார் சைக்கிளிலே நகரத்திற்கு சென்று அங்கு மெஹருல்லாவை தேடி பிடித்து,விலங்கிட்டு தம்மோடு கிராமத்திற்கு அழைத்து வருகின்றார்..சுட்டெரிக்கும் வெயிலில்,நேர் எதிர் மனநிலைகொண்ட இருவர் முகம் பார்த்து பேச விருப்பமின்றி மேற்கொள்ளும் பயணம்.....எதிர்பாரா விதமாய் மோட்டார் சைக்கிள் கோளாறினால் ஆள் இல்லா பாலைவனத்தில் இருவரையும் தனிமைபடுத்தி அவர்களுக்குள்ளான இறுக்கத்தை மெல்ல மெல்ல விடுவிக்கின்றது.சேருமிடம் தெரியாது பாலைவனம் எங்கும் இருவரும் அலைந்து திரியும் சமயம் அதீத உடல் சோர்வினால் மெஹருல்லாவை தன்னை விட்டுவிட்டு போகும்படி நிற்பந்திக்கும் தந்தையை விட்டு விலகாது நீர்நிலை கண்டடைந்து அவரை இழுத்து சென்று நீர் அருந்த செய்யும் மெஹருல்லா,அவர் மீதான நேசத்தை உணரும் அற்புத கணத்தோடு முடிகின்றது திரைப்படம்!!

தாய்,தந்தை இருவருக்குமான பிரியங்கள் எவரோடும் பகிர்ந்து கொள்ள கூடியதில்லை.......அவர்களுக்கு மட்டுமேயானது ..!!அவ்வகை பிரியத்தை வேறொருவரோடு பகிரும்படியான சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகும் ஒரு சிறுவன் கொள்ளும் உணர்ச்சி போராட்டத்தை நுட்பமாய் பகிர்கின்றது இத்திரைப்படம்.

Tuesday, July 27, 2010

அந்தோன் சேகவ் கதைகள் - ரஷ்ய மொழிபெயர்ப்பு

உலக இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமான பெயர் அந்தோன் சேகவ்.ரஷ்ய எழுத்தாளரான சேகவின் சிறுகதைகளும்,குறுங்கதைகளும் அடங்கிய தொகுப்பிது.சேகவ் விவரிக்கும் கதைகள் ஊடாக தொன்மையான ரஷ்யாவின் அன்றாட காட்சிகள்..குடும்ப சூழல்..சமூக கட்டமைப்பு போன்றவை மிக தெளிவாக புலப்படுகின்றன.அதிகார வர்க்கத்தின் மேட்டிமைத்தனத்தை, மெலிந்தோரின் அடிமை புத்தியை பெரும்பாலான கதைகள் வாசகனுக்கு முன்னிறுத்துகின்றன.எள்ளல் மிகுந்து,சோகம் தோய்ந்து,சலனம் அற்று,காத்திரம் நிறைந்து என கலவையான எழுத்து...தேர்ந்த மொழிபெயர்ப்பினால் நல்லதொரு வாசிப்பனுபவமாய் அமைந்தது.




பச்சோந்தி(1884 ),எல்லா கால கட்டத்திற்கும் பொருந்தும் கதை.கடை வீதியில் ஒருவனை நாய் கடித்துவிட்டதாய் கேள்விப்படும் காவல்துறை அதிகாரி முதலில் நாய்க்கு உரியவனை திட்டி தீர்ப்பதும்,பின்பு அது ஜெனரல் உடையதாக இருக்கக்கூடும் என அறிந்து சட்டென பேச்சை மாற்றுவதும் என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் சராசரி அரசு அதிகாரியின் புத்தியை நகையாடுகிறது.முகமூடி(1884 ),சமூக மன்றம் ஒன்றின் காட்சிகளை எள்ளல் தொனிக்க விவரிக்கும் இக்கதை மோசமானதொரு சமூக சூழலை மறைமுகமாய் வாசகனுக்கு உணர்த்துகின்றது.வருடங்கள் எத்தனை கடந்தாலும் பணபலம் பொருந்திய மேல் வர்க்கத்திற்கு சலாம் போடும் மனநிலை,மனித சமுதாயத்தில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் அவலத்தை மீண்டும் நினைவுறுத்துவதான கதை.


வான்கா(1886 ),இத்தொகுப்பில் என்னை மிக கவர்ந்த கதை.வேலை பயில முதலாளியின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை சிறுவன் வான்கா,தூரத்து கிராமத்தில் இருக்கும் தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதத்தை சிறுவனின் மனநிலையில் இருந்து வாசித்ததால் அதில் விரவி இருக்கும் பிரியத்தை சோகம் தாண்டி ரசிக்க முடிந்தது.முதலாளியின் கொடுமை தாங்காத சிறுவன் வான்கா மீண்டும் வீடு சேர ஆவல் மேலிட,தன் வருத்தங்களை,தாத்தாவிற்கான தனது பிரியங்களை நிறைந்த கனவுகளோடு எழுதும் இக்கடிதம் மனதை கனக்க செய்வது..


"என் அன்பிற்கு உரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை.எனக்கு உயிர் போகின்றது.இங்கிருந்து ஓடி விடலாம்.நடந்தே கிராமத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்...நான் பெரியவன் ஆனதும் உன்னை கருத்துடன் கவனித்து கொள்வேன்.உன்னை யாரும் துன்புறுத்த விடமாட்டேன்..."



"கூட்டில் அடைந்த மனிதர்" (1898) ,மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணாதிசியங்களை நாம் பெரிதும் பொருட்படுத்துவதில்லை அது இயல்பை மீறும் வரை.எதார்த்த வாழ்கையை விட்டு முற்றிலும் தம்மை துண்டித்து கொண்டு உலவுவோர் நம்மிலும் உண்டு.அத்தகைய மனிதர் ஒருவரை பற்றிய சுவாரஸ்ய கதையே இது.பேலிக்கவ்,கிரேக்க மொழி பேராசிரியரான இவரின் அன்றாடங்கள் சராசரி மனிதர்களிடம் இருந்து வேறுபடுவதோடு பெரும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது..எப்போதும் புதைமிதி கால்மிதிகள் அணிந்து,மடித்துவிட்ட முழுக்கை சட்டை மற்றும் குடையுடம் தோன்றும் பேலிக்கவ் கடந்த காலத்தை மட்டுமே புகழ்ந்து பேசி நிகழ்காலந்தின் மீது தீரா வெறுப்பு கொண்டு யாவரும் வெறுக்கும் மனிதராய் இருக்கின்றார்.அவருக்கு ஏற்படும் எதிர்பாரா காதல்,அதன் ஊடாய் கொள்ளும் மாற்றங்களும் தொடர்ச்சியாய் நிகழும் மரணமும் என நேர்த்தியாய் அம்மனிதனின் வாழ்க்கையை விவரிக்கின்றது இக்கதை.


"பள்ளத்து முடுக்கில்"(1900),வாழ்ந்து ஒழிந்த குடும்பத்தை பற்றிய கதை என மேலோட்டமாக கொண்டாலும்..மறைமுகமாய் இக்கதை அக்காலகட்டத்தில் ரஷ்ய அதிகார வர்க்கங்களிடையே பெருகி கிடந்த போலித்தனங்களும்,அதை மூடி மறைக்க மேற்கொண்ட வழிமுறைகளும்.. தெரிந்தும் எதிர்த்து கேட்கவியலா பொதுஜன நிலையையும் கடுமையாகவே சாடுவதாக உள்ளது."தத்துக்கிளி"(1892 ),அசல் மேல்குடி பெண்ணான ஒல்கா இவானவ்னா,கேளிக்கைகளிலும்..இசை,நடனம்,ஓவியம்,இலக்கியம் மீதான ஆர்வத்தினால் கூடா நட்பு கொண்டு தனது இனிய காதல் கணவனை இழந்து நிற்கும் பரிதாப நிலையை விரிவாய் சொல்லும் இக்கதை,இல்லறம் தாண்டும் பெண்களின் முடிவை ஓர் கணவனின் உண்மை காதலோடு சொல்லும் சோக காவியம்!!

சேகவ், சித்தரித்துள்ள ரஷ்யா மறைந்து புது ரஷ்யா தோன்றிவிட்டது...அவர் கதைகளில் சாடிய அதிபர்களும்,வர்த்தகர்களும் கடந்த காலத்திற்கு உரியவர்களாகி போனார்கள்..இருப்பினும் ஒவ்வொரு கதையில் அவர் முன்னிறுத்திய உண்மை மறுக்கவியலாதது.காலம் கடந்து இன்றும் இவ்விலக்கியங்கள் பேசபடுவதற்கும் அதுவே காரணம்.

மொழிபெயர்ப்பாளர் - ரா.கிருஷ்ணையா
வெளியீடு - முன்னேற்ற பதிப்பகம் (1975 )

Wednesday, May 19, 2010

பதின் வயது நினைவுகள்...

பதின் வயது நினைவுகளை மீட்டெடுக்கும் இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழர் ஜெயமார்த்தாண்டனுக்கு நன்றி.

பதின் வயது என்றெண்ணும் பொழுது....... அம்மாச்சி வீட்டில் கழித்த விடுமுறை நாட்கள்,பள்ளி நட்புகள்,சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,பல்லாங்குழி/ஆட்டம்,கல்லா-மண்ணா/தாயம்/கொக்கோ,அம்புலிமாமா-ராணி மிக்ஸ்,ஒலியும் ஒளியும்,பள்ளிக்கு தினமும் சென்று வந்த ரிக்சா பயணம்,பங்கு கொண்ட பேச்சு - கட்டுரை போட்டிகள்,பரிட்சைக்கு பயந்து தூங்காது கழித்த இரவுகள்,பிரியத்திற்குரிய ஆசிரியைகள்,ஏக்கமாய் இருந்த ரயில்பயணம்,கடலை காணும் பேராவல்,கிராமத்தில் கமலை கிணற்று குளியல்கள்,பட்டாசலை வாசலில் அமர்ந்து தாத்தாவிடம் பழங்கதைகள் பேசிய பொழுதுகள் என கலவையாக பலவும் நினைவிற்கு வந்து போகின்றன...மீண்டும் மீண்டும் பேசினாலும்/நினைத்தாலும் தீராத நாட்கள் அவை!!

படித்த பள்ளி..அம்மையும்,அம்மாச்சியும் படித்ததும் அங்கே தான்..முதல் நாளில் அதன் பிரம்மாண்ட தோற்றம் தந்த ஆச்சர்யம் விலக பல நாட்கள் பிடித்தது.ஆங்கிலேய காலத்து கட்டிடங்கள்,ஓங்கி வளர்ந்த மரங்கள்,பரந்த மைதானங்கள்,கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்கள்,சேல்ஸ் டே என வீட்டு பாடம்,கண்டிப்பான ஆசிரியைகள் தாண்டி பள்ளி நாட்கள் பிடித்து போக அனேக காரணங்கள் இருந்தன.பள்ளி தந்த நட்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன....மழை ஓய்ந்த ஒரு மாலையில் கூடை பந்து மைதானத்தில் சைக்கிளில் வட்டமடித்தபடி பிரிவை குறித்து பேசிகொண்டிருந்தேன் தோழிகள் இருவரோடு ....ஆச்சர்யமாய் இப்போது மூவருமே ஒரே பணியிடத்தில்.இப்பொழுதும் மழை நாட்களில் என் பள்ளியை நினைத்து கொள்வேன்,சில இடங்களை மழையோடு பொருத்தி பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை!!

மனோகரன் அண்ணா,தல்லாகுள வீதிகளில் எங்கே இடர்பட்டாலும் பெரிதாய் புன்னகைப்பார்..சட்டென,ரிக்சா 8:௦௦ மணிக்கு என பரபரத்த காலை பொழுதுகள் நினைவிற்கு வந்து மறையும்.ஒவ்வொரு வருடமும் நோட்டு/புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபிளில் எழுதும் பொழுது, அப்பா "ம்ம்ம்..சார் பெரிய கிளாஸ் போறிங்களா" என சொல்லி கொண்டே தன் அழகிய கையெழுத்தில் பெயர்,வகுப்பு எழுதி தந்தது நேற்றைய நிகழ்வு போல உள்ளது...





விடுமுறை நாட்களை கழிக்க எப்போதும் எனக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.அம்மாச்சி வீடு அல்லது அப்பாவின் கிராமம்...அம்மாச்சி.பெரியம்மாக்கள் எல்லாரும் ஆசிரியர்கள் என்பதாலோ ஒரு வித மிலிட்டரி தனமான ஒழுங்கு முறை விடுமுறை நாட்களிலும்...நேரத்திற்கு சாப்பாடு,குளியல்,நிழலில் மட்டுமே விளையாட வேண்டும் என்று..இதற்கு தலைகீழாய் எங்கள் கிராமத்தில் தாத்தா பாட்டி உடன் கழித்த பொழுதுகள்,பேருந்து வசதியற்ற அன்றைய நாட்களில் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து நடந்தே எங்கள் ஊருக்கு செல்வோம்..வீட்டை சென்றடைய எந்நேரம் ஆனாலும் பாட்டியை தேடி வயற்காட்டிற்கு ஓடி விடுவேன்..வாழை தோட்டத்திலோ,கடலை காட்டிலோ,தென்னந்தோப்பிலோ.....தேடி சென்று கட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம்!!

அங்கு தங்குதடைகள் எதுவும் இல்லை..புழுதி காட்டில் ஆடி திரியலாம்..பம்ப் செட்டில் குளித்து மகிழலாம்..மாலையானால் மந்தையில் பிள்ளைகளோடு விளையாடலாம்..... வளையல் வியாபாரிகள்,குச்சிஐஸ் வண்டிக்காரர்,பருத்திப்பால் வியாபாரிகள் என சில்லறை செலவு செய்ய காரணமானவர்கள் நிறைய..!!மாலை நேரங்களில் ஆட்கள் நிரம்பி சலசலவென இருக்கும் பட்டாசலையில்,அமைதியான பகல் பொழுதுகளில் அமர்ந்து தெருவை..அரிதாய் வரும் இரண்டொரு வியாபாரிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் கூட அன்றைய பொழுதுகளில் சுவாரஸ்யமே!!

தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு காலை மோக்லி,சந்திரகாந்தா ..மற்றும் இரவு தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது பதின்மங்களில் இறுதியில்.

பதின்மன் காலம் குறித்து யோசிக்க யோசிக்க மீண்டும் அதனுள் புகுந்து விடமுடியாதா என ஏக்கமே மிஞ்சுகின்றது..சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது. இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.அவ்வகையில் கீழ் உள்ள வண்ணதாசனின் வரிகள் அர்த்தம் மிகுந்ததாய் படுகின்றன.

"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது"

-- வண்ணதாசன்


பதின்மன் கால நினைவுகளை தொடர நர்சிம்மை அழைக்கின்றேன்

Wednesday, May 5, 2010

ரைநீஸ் ஐயர் தெருவில்.......!!

வாசிப்பின் இடையே இடர்படும் ஏதேனும் இடம் குறித்த சிறுகுறிப்பும் ஈர்த்திடும்.. முடிந்தால் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் சட்டென தோன்றி மறையும்.பள்ளி நாட்களில் படித்த சரோஜினி நாய்டுவின் "Bazaars Of Hydrabad " கவிதை அப்பெரு நகரின் ஜன நடமாட்டம் நிறைந்த சந்தை காட்சிகளை வெகு அழகாய் விவரிக்கும்.அந்த நகரம் குறித்த அழகிய பிம்பத்தை தோற்றுவித்த அவ்வர்ணிப்புகள் இன்றும் நினைவில் உண்டு.



மதுரைக்கு அடுத்தபடியாய் மனதிற்கு நெருக்கமாய் உணரும் நகரம் நெல்லை.நேரில் சென்று பார்க்கும் முன்னரே அத்தகைய உணர்வை தோற்றுவித்தவை வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் கதைகள்.வேனிற் காலத்து நீண்ட பகல்கள்......ராஜாவின் இசை..வண்ணதாசன் சிறுகதைகள் - மூன்றும் சேர்ந்த பொழுதுகள் ஊடே,அந்நகரம் சார்ந்த வாசிப்பு கூட என் ஆர்வத்தை கூட்டிட காரணமாய் இருக்கலாம்.இவர்களின் கதைகளில் வரும் நெல்லை குறித்த வர்ணிப்புகளை பெரும்பாலும் மதுரையோடு குழப்பி கொள்வேன்.வண்ணதாசனின் "ஆறு" சிறுகதையில் சுலோச்சன முதலியார் பாலம் - அரவிந்த் கண் மருத்துவமனை குறித்து வாசித்துவிட்டு மதுரையில் அந்த பாலம் எங்குள்ளது என அப்பாவிடம் விசாரித்தது நினைவில் உள்ளது.

வண்ணநிலவனின் "கம்பா நதி" குறித்த பதிவில்....

"தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது...."


கதைகளில் வாசித்து,காட்சிபடுத்தியிருந்த இடங்களை நேரில் தேடி சென்றது இதுவே முதல் முறை..வாசிப்புதேடல் ஒரு வகை சுவாரஸ்யம் என்றால் இது ஒருவகை,சொல்ல தெரியவில்லை.அதிகப்படியான கிறுக்காய் கூட தோன்றலாம்..மதுரையில் இருந்து சாத்தூர்,கோவில்பட்டி,இடைச்செவல், கயத்தாறு வழி சென்ற மரங்கள் அற்ற நெடுஞ்சாலை பயணம் தந்த அயர்ச்சி நெல்லையை அடைந்ததும் சட்டென மறைந்துவிட்டது.மல்டி ப்ளெக்ஸ்,காபி டேக்களின் பிடியில் சிக்காது அதன் இயல்போடு மிளிரும் சிறு நகரம்!!வார்த்தைகளின் கண்டிருந்த சுலோச்சன முதலியார் பாலம்,தாமிரபரணி ஆறு,ரத்னா டாக்கீஸ் தொடங்கி கோவில் ரத வீதிகள்,தெப்பம்,சென்ட்ரல் டாக்கீஸ் என பல இடங்களை பார்த்து வந்தது இனம் புரியா மகிழ்ச்சி!!



வண்ணநிலவனின் "ரைநீஸ் ஐயர் தெரு"- டாரத்தி,அன்னமேரி,இருதயம்,தியோடர்,சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை,எபன் என வண்ணநிலவன் அந்நாவலில் உலவ விட்ட கதை மாந்தர்களை எளிதில் மறப்பதற்கில்லை.எப்போதும் மழை நனைத்த தெருவாகவே அதை உருவகப்படுத்தி வைத்திருப்பேன்.மழைக்கும் அத்தெருவிற்குமான உறவு நாவலில் வெகு நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.பாளையங்கோட்டையில் சிறு தேடலுக்கு பிறகு ரைநீஸ் ஐயர் தெருவை கண்டுகொண்டதும் சிறு பிள்ளைக்கான உற்சாகம் தோன்றி மறைந்தது!!


நகரின் எளிமை,நெல்லையப்பர் கோவிலின் அழகிய சிற்பங்கள்(சாமி சன்னதிக்கு முன்பான தூண்கள் ஏற்படுத்திய பிரமிப்பு),நேர்த்தியான தேர் வீதிகள்,அழகு தமிழ்,தெப்பக்குளம்,தாமிரபரணி..அதன் கரையோர கல் மண்டபங்கள்,பரபரப்பான கடை வீதிகள்,எந்திரதனம் அற்ற மனிதர்கள்...என அச்சிறு நகரத்தை பிடித்து போனதிற்கு காரணங்கள் பலவுண்டு!!பெருமழை காலத்தில் மீண்டும் நெல்லை சென்று வர வேண்டும் தாமிரபரணியில் வெள்ளம் பார்க்கவேணும் !!

Thursday, April 22, 2010

தென்னக பண்பாட்டு மையம் - இயல் இசை நாடக மன்றம் :கவிதைப் பட்டறை

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.

மற்றும்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

இணைந்து நடத்தும்

POETRY WORKSHOP

கவிதைப் பட்டறை



நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com

இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.


மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

------------------------------------------------------------------------------------

அன்புடையீர்,

வணக்கம். தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை (Poetry Workshop) நடத்தவிருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் அமையும் இந்நிகழ்வைப் பற்றிய அறிவிப்பினை இத்துடன் இணைத்துள்ளோம். உங்களின் வலைப்பக்கத்தில் இதனை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க நன்றி

தமிழ்ச்சங்கமம் குழுவினர்

Saturday, April 17, 2010

மஜித் மஜிதியின் "பாரான்"...........மண் சேரா மழைத்துளி!!

"பாரான்".......மென்மையான என்பதிற்கு மேலாக ஏதேனும் வார்த்தை இருந்தால் அத்தகைய காதல் கதை.கட்டி பிடித்தும்,கை கோர்த்து திரிந்தும்,கண்களால் ஜாடை பேசி திரியாத மென் காதல்!!கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்தில பணி செய்யும் லத்தீப்பின் உற்சாகமான காலை பொழுதோடு விரிகின்றன காட்சிகள்.இரானில் குடியேறியுள்ள ஆப்கன் அகதிகள் முகாமில் இருந்து வெகு தூரம் பயணித்து குறைந்த கூலிக்கு அக்கட்டிடத்தில் பணி செய்கின்றனர்.அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசு அதிகாரிகளுக்கு பயந்து வேலை செய்யும் சூழ்நிலை.கட்டிட பணி நடக்கும் இடம் குறித்தான காட்சிகள் வெகு நேர்த்தி.




பணியிடத்தில் சாப்பாடு மற்றும் டீ தயார் செய்து கொண்டு நாட்களை மகிழ்ச்சியாய் கழிக்கும் துடுக்கான நாயகன் கதாபாத்திரம் படம் முழுக்க உற்சாகம் குறைவின்றி சித்தரிக்கபட்டுள்ளது.அங்குள்ளவர்களிடம் வம்பிழுத்து கொண்டு,தன சம்பாத்திய பணத்தை வெகு கவனமாய் சேர்ந்து வைத்து தினமும் எண்ணி பார்த்து கொள்ளும் லத்தீப் கட்டிட மேலாளர் மேமாருடன் கொள்ளும் உரையாடல்கள் அவனை குறித்து சுலபமாய் அறிந்து கொள்ள போதுமானவை.கட்டிட பணியின் பொழுது கீழே விழுந்து காயமுறும் நஜாப் என்னும் தொழிலாளி தனக்கு பதில் வேலை செய்ய தன மகன் ரஹ்மத்தை அனுப்புகின்றார். பலகீனமான ரஹ்மத்தால் கடுமையான கட்டிட பணிகளை செய்ய முடியாத காரணத்தினால் லத்தீப்பின் பணி அவனுக்கு தரப்படுகின்றது.தனது சுதந்திரம் மொத்தமாய் பறிபோனதினால் ரஹ்மத்தை வெறுக்க தொடங்கும் லத்தீப்பின் மனநிலை மாற்றம் காண்பது ரஹ்மத் ஒரு பெண் என்று அறியும் பொழுது.

அவனையும் அறியாது அப்பெண்ணின் மீது ஏற்படும் பிரிய கனங்கள் கவிதைகள்!!திரை சீலையில் அவளின் கூந்தல் விரித்த உருவத்தை பார்த்து பெண்ணென கண்டு கொள்ளும் காட்சி...சக தொழிலாளர்களிடம் இருந்து அவளை பாதுகாக்க எண்ணி தடுமாறும் பொழுதுகள் ஆகட்டும்...அவளின் பொருட்டு தலை சீவி,பளிச்சென ஆடை உடுத்தி உற்சாகமாய் வலம் வருவதாகட்டும்..அடையாள அட்டை குறித்து அதிகாரிகள் சோதனையிட வரும் சமயம் அவளை தப்பிக்க வைக்க பெரும் முயற்சி எடுத்து வெல்வதாகட்டும்...முழுக்க முழுக்க நாயகனின் ஆக்கிரமிப்பு தான்!!



அதிகாரிகளுக்கு பயந்து தப்பி செல்லும் நாயகியின் பிரிவை அவன் கடக்கும் நாட்கள் இன்னும் அழுத்தமாய் காதலை பதிவு செய்கின்றன.இதுநாள் வரையில் அவன் வெறுக்கும் புறாக்கள் காதலின்/காதலியின் நிமித்தம் அவனுக்கு நெருக்கமாய் ஆகின்றன.பெயர் தெரியா காதலியை தேடி லத்தீப் தொடங்கும் பயணம் இன்னும் சுவாரஸ்யமானது.தேடலின் நிமித்தம் காதல் என்னும் பொழுது சுவாரஸ்யத்தை மீறிய அழகொன்று சேர்ந்து கொள்கின்றது. எங்கெங்கோ தேடியலைந்து அவளின் இருப்பிடத்தை அடையும் அவன் ஏழ்மையின் பொருட்டு அவளின் கஷ்ட ஜீவனை பார்த்து வெறுமையோடு திரும்புகின்றான்..இது நாள் வரையில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் மேமாரிடம் பொய் சொல்லி பெற்று கொண்டு நண்பர் ஒருவரின் மூலம் அவளின் தந்தையிடம் கொடுக்க சொல்கின்றான்.பரிதாபமாக அந்த முதியவரோ அப்பணத்தை கொண்டு ஆப்கான் சென்றுவிடுகிறார்.

அந்த அதிர்வை வெகு இயல்பாய் ஏற்று கொள்ளும் லத்தீப்..அவளுக்கு உதவும் பொருட்டு தனது அடையாள அட்டையை அடகு வைத்து பணம் மீட்டுகிறான்.இம்முறை பணத்தை தான் நேரில் சென்று கொடுக்கின்றான்.அச்சமயமே அவளின் பெயர் பாரான் என அறிகிறான்.மேலும் ஆப்கான் செல்ல அவளின் தந்தை செய்து வரும் ஏற்பாடுகள் குறித்த செய்தியை தாங்கி திரும்புகின்றான்.இறுதி காட்சியில் அவர்கள் பயணத்திற்கு சாமன்களை வண்டியில் வைக்க உதவும் பொழுது சிதறிய பொருட்களை இருவரும் எடுக்கும் இறுக்கமான சூழ்நிலையில் காதல் வெளிப்படுகின்றது ஒற்றை பார்வையில்.தனக்கான ஒரே அடையாளத்தையும்,சம்பாதித்த மொத்த பணத்தையும் காதலுக்காய் இழந்து..தனித்து நிற்கும் லதீப்பிற்கு துணையாய் மழை வருவதோடு முடிகின்றது..பாரான் என்பதிற்கு பொருள் மழை என்னும் வகையில் இக்காட்சி உணர்ந்துவது ஏராளம்.


பார்வையாளனை எந்தவித அதிர்விற்கும் உட்படுத்தாமல், மிக மென்மையான காதலை ஆப்கன் அகதிகளின் அவல வாழ்க்கையோடு பகிர்கின்றது இத்திரைப்படம்.மெல்லிய புன்னகையோடு கடந்த காட்சிகள் பல..மழை கிளறிவிடும் மண்வாசனைக்கு ஒப்பான அனுபவம்!!

Monday, April 5, 2010

ராஜேந்திரசோழன் கதைகள்

இதுவரை வாசித்திடாமல் போனதற்கு வருத்தம் அடைய செய்த தொகுப்பிது.மனித மனங்களின் சலனங்களை எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை கொண்டு விவரிக்கின்றன இக்கதைகள்.எல்லா கதைகளிலும் ஒரு பேரமைதி..அது கதைமாந்தர்களின் மன குமுறல்களின் சத்தத்திற்கு மீறி வாசகனை கட்டி போடுகின்றது.அமுங்கிய குரலில் இத்தனை காத்திரமான கதைகளை மிக நேர்த்தியாய் புனைந்துள்ளார் ராஜேந்திரசோழன்.இங்கு கதைமாந்தர்களே பிரதானம்.....வர்ணனைகள்,பூச்சு வேலைகள் யாதும் அற்ற வாழ்வின் நுட்பமான தருணங்களின் சாட்சியமாய் இக்கதைகள்.

இல்லறம் தாண்டிய உறவுகள் தேடும் ஆண் பெண் இருவருக்குமான புத்தியின் எதார்த்த விவரிப்பாய் "கோணல் வடிவங்கள்" மற்றும் "புற்றிலுறையும் பாம்புகள்" கதைகள்."புற்றிலுறையும் பாம்புகள்",இக்கதையில் எதிர் வீட்டு இளைஞன் குறித்து பகல் முழுதும் சடசடத்து திரியும் மனைவியின் அலட்டல்களுக்கு...பொறுமை காத்து விட்டு கடைசியாய் அவன் "சும்மா பொண பொணன்னிக்னு........இப்பதான் ஒரேடியா காட்டிக்கறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்" என கூறும் ஒற்றை வரியில் எத்தனை அர்த்தம்!!கோணல் வடிவங்கள் சிறுகதை வெளிவந்த சமயம் எதிர்கொண்ட இலக்கிய விமர்சனங்களை தனது பின்னுரையில் விரிவாய் எழுதி உள்ளார் ராஜேந்திரசோழன்.ஆண் பெண் உறவின் பொருட்டு தொடரும் பகடை ஆட்டங்கள் தான் எத்தனை வகை என எண்ணும் படியான கதைகள் இத்தொகுப்பில் அதிகம்.



வண்ணதாசன் சிறுகதை ஒன்று,காதலிக்கு கொலுசு வாங்க சென்ற கடையில் தனது பரிசு கோப்பையை விற்று பணம் பெற கெஞ்சி கொண்டிருக்கும் சிறுவனை கண்ட நாயகன் கொள்ளும் மனநிலை..சங்கடம்,மாறு படும் தேவைகளின் பொருட்டு தனது காரியம் அற்பம் என உணரும் தருணம்.இங்கும் அதே போன்றதொரு மனநிலைக்கு தள்ளபடும் நாயகன்,"ரோமியோ ஜூலியட்"திரைப்படம் காண கால் கடுக்க திரைஅரங்கின் முன் பகல் பொழுதொன்றில் நின்றிருக்கும் நாயகனை,சாலையில் வித்தை காட்டும் சிறுமிகள் இருவர்,அம்மை தழும்பு முதியவர் ஆகிய மூவரின் உணர்ச்சியற்ற யாசகம் "ரோமியோவாது ஜூலியட்டாவது..." என அவ்விடம் இருந்து வெளியேற்றுகின்றது.

தொழில் செய்யும் இடத்தில தனதிடத்தை வேறொருவன் ஆக்கிரமித்து கொள்ளும் சமயம் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏமாற்றமும்,பொறாமையுமாய் "எதிரி" சிறுகதை வெகு இயல்பாய் சொல்லி செல்கின்றது.நினைவுகளின் நீட்சியாய் கனவுகள் தொடர்வதை காரிருள் தரும் இறுக்கமான மனநிலையை போல விரியும் கதை "இச்சை". "எதிர்பார்ப்புகள்" மற்றும் "சிதைவுகள்" இரண்டுமே ஒரே வகையான கதை களங்கள்.அடலசன்ட் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்புகள்..இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி திணறும் வாலிப மனங்கள் குறித்தான இக்கதைகள் மிக மிக நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை தாமே வகை பிரித்துள்ளார் ராஜேந்திரசோழன்.இவ்வளவு வெளிப்படையாக தமது படைப்புகள் குறித்த விமர்சனங்களை ஒரு எழுத்தாளர் முன்வைப்பது ஆச்சர்யமாய் உள்ளது.இலக்கியம் குறித்து பின்வருமாறு தனது உரையில் குறிப்பிடுகின்றார்,


"இலக்கியம் என்பது இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு அனுபவ வெளியீடாகவே இருக்கிறது.ஒரு படைப்பின் வாசகன் தன சொந்த அனுபவத்திற்கும் படைப்பாளனின் வெளிப்பாட்டு அனுபவத்திற்கும் ஊடேயே படைப்பினால் விளையும் அல்லது படைப்பை உற்பத்தி செய்யும் அனுபவத்தை அடைகின்றான்".



இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஆகசிறந்தவையே!!"டெய்லர் கந்தசாமி",கடன்","கைக்கிளை" ஆகியவை குறிபிடத்தக்கவை.கொஞ்சம் மிகுதியாய் போய் இருந்தால் கூட வக்கிர தொனியிலான கதைகளாக மாறி இருக்க கூடியிருக்கும்..மாறாக முழுக்க முழுக்க கதை மாந்தர்களின் நேரடி உரையாடல்களில் வாசகனுக்கு யாவும் நேர்த்தியாய் தெரிவிக்கபட்டுள்ளது.தவிர்க்க கூடா வாசிப்பு!!


வெளியீடு - தமிழினி
விலை - 250ரூபாய்

Tuesday, March 16, 2010

A Very Long Engagement - பிரெஞ்சு திரைப்படம்

அதி தீவிர காதலை போரின் துயர விளைவுகளோடு பகிர்ந்திடும் இத்திரைப்படத்தை பார்க்க எனக்கான ஒரே காரணம் Audrey Tautou.ஏதோ ஒரு மயக்கும் வசீகரம் அந்த புன்னகையில்!!குழந்தை சிரிப்போடு இவர் தோன்றும் அமேலி திரைப்படம் உலக திரைப்படங்கள் வரிசையில் முக்கியமானது. இத்திரைப்படம்,முதலாம் உலக (பிரெஞ்சு - ஜெர்மனி)போரில் இறந்ததாக நம்பப்படும் தனது காதலன் மெனக் எங்கோ உயிரோடு இருக்கின்றான் என்கிற நம்பிக்கையில் மெதில்டா மேற்கொள்ளும் தேடலை சுவாரஸ்யம் கூட்டி சொல்லுகின்றது.

ராணுவ பணியில் இருந்து விடுபட தங்களை தாங்களே காயம்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டப்படும் ஐந்து வீரர்களை குறித்த அறிமுகத்தோடு தொடங்குகின்றது திரைப்படம்.அந்த ஐவரில் மெதில்டாவின் காதலன் மெனக்கும் ஒருவன்.யுத்த களத்தில் இருந்து வெளியேற்றபடும் அந்த வீரர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களில் இறந்துவிட்டதாக நம்பபடுகின்றது.மெதில்டாவின் இதயம் எப்போதும் தனது கைகளில் துடித்து கொண்டிருப்பதாக சொல்லும் மெனக்,மரணத்தின் சமீபத்திலும் கூட அவர்கள் இருவருகும்மான ரகசிய குறியீடான "MMM"(Metilda Marry Menach)யை கருகிய மரம் ஒன்றில் செதுக்குவது என குறைந்த அளவிலான காட்சிகளில் நாயகனின் காதலின் தீவிரம் அழகாய் உணர்த்தபடுகின்றது.



திரைப்படம் முழுவதும் நாயகி மெதில்டாவின் ஆதிக்கம் தான்.இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு போலியோவினால் பாதிக்க பட்ட மேதில்டாவிடம் "நடப்பதற்கு சிரமமாக இல்லையா" என சிறுவன் மெனக் கேட்பதோடு தொடங்குகின்றது.அழகிய அக்கடற்கரை கிராமத்தின் கலங்கரை விளக்கத்தின் மீதேறி விளையாடும் அவர்களின் பால்ய காலங்கள்,கடற்கரை பாறைகளில் முதல் முதலாய் "MMM" என்பதை செதுக்கி கூச்சலிடும் மெனக்,தேவாலைய ராட்சச மணிகளில் மீண்டும் தங்களின் காதல் குறியீட்டை பதிப்பதுமான அவர்களின் சந்தோஷ தருணங்கள் மெல்லிய புன்னகையோடு ரசிக்கும்படியானவை.

மெனக் குறித்த செய்திகளை சேகரிக்க பாரிஸ் நகரம் செல்லும் மெதில்டா,துப்பறிவாளர் ஒருவரின் உதவியுடனும்,தனது கார்டியனான பெரியவருடனும் மெனக்கை யுத்த களத்தில் கடைசியாய் பார்த்தவர்களிடம் ஏதேனும் நல்ல செய்தி கிடைக்குமென நம்பிக்கை தேம்பிய விழிகளோடு பார்த்திருப்பது,சின்ன சின்ன நிகழ்வுகளின் சாத்தியத்தை கொண்டு மெனக் உயிரோடிருப்பதாய் சமாதானம் கொள்ளுவதுமான காட்சிகளில் ஆட்ரேயின் நடிப்பு அபாரம்.இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று,நாயகியின் உடல் குறையை வைத்து எந்த காட்சியிலும் சென்டிமென்டல் பேத்தல் பண்ணாமல்,அது குறையாய் கவனிக்கபடாமல் இருப்பதில் கவனம் மேற்கொண்டுள்ளனர்.பார்வையாளனுக்கு அழுத்தமாய் முன்னிறுத்தபடுவது அவளின் தளராத மனஉறுதி மட்டுமே.

மெனக்கை தேடி தொடங்கும் மெதில்டாவின் பயணத்தில் கிடைக்கும், உடன் குற்றம் சாற்றப்பட்ட மற்ற வீரர்கள் குறித்த குறிப்புகள் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஏதோ ஒன்றை இழந்தோ,இழந்த ஒன்றை கண்டேடுக்கவோ தான் போர்களத்திற்கு செல்கின்றான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.மெனக்கின் மரணம் நிகழ்திருக்க கூடிய சாத்தியங்கள் அதிகப்படும் பொழுதுகள்,அதன் தொடர்ச்சியாய் நம்பிக்கை முழுதுமாய் நீர்த்து போன மனநிலையில் மெனக்கின் கல்லறையில் மெதில்டா பேசும் உருக்கமான காட்சி....என செல்லும் திரைக்கதையில் எதிர்பாரா திருப்பம் இறுதி காட்சி..!!

அமேலி திரைப்பட இயக்குனரின் மற்றொரு படைப்பான இதில் குறிப்பிடும்படியான விஷயங்கள் பல......சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட தங்கள் பகுதியை நிறைவாய் செய்திருப்பது,கடற்கரை கிராமத்தின் அழகை நேர்த்தியாய் கொணர்ந்திருக்கும் ஒளிப்பதிவு,ஆடை வடிவமைப்பு மற்றும் 1900களின் தொடக்கத்திலான பாரிஸ் நகரை கண்முன் நிறுத்தும் சிறப்பான கலை இயக்கம் என......காதலும்,தேடலுமான மேதில்டாவின் இப்பயணத்தின் சில உன்னத தருணங்கள் காதல் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதலுக்கு அர்த்தம் கூட்டுபவை!!

Wednesday, March 10, 2010

இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள்

இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த விரிவான அறிமுகத்தோடு பிரேசில்,அர்ஜென்டினா,சிலி,டொமினிக் குடியரசு,கொலம்பியா தேசத்து முக்கிய இலக்கிய படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பிது.இலத்தீன் அமெரிக்க தேசங்கள் தோன்றிய வரலாற்றையும் அதன் நாகரீக வளர்ச்சியையும் கோடிட்டு காட்டும் அறிமுக கட்டுரை இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்க பெரும் தூண்டுதல்.ஸ்பானிஷ் - இந்தியர் கலப்பினமான மெஸ்டிஜோ குறித்த தகவல் குறிப்பிடதகுந்த சுவாரஸ்யம் கொண்டது.மொழிபெயர்ப்பு எளிமையாய் இல்லாதது புரிதலில் சிக்கல் ஏற்படுத்தவில்லை மாறாக ஆழ்ந்த வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாய் தோன்றியது.

அர்ஜென்டினா சிறுகதைகள்

இசிதேரோ ப்ளேஸ்டின் பெகுண்டோ மாமா

அழகிய குடும்பம் ஒன்றின் சரிவை,அதில் இருந்து மீள அவர்கள் எடுக்கும் விபரீத முடிவை அதிர்ச்சி தரும் விவரணைகளோடு சொல்லும் இக்கதை உதாரண குடும்பங்கள் சிதையுறுவதை ஆராய்கிறது.எல்லாவிதமான மோசமான ஆசைகளும் கொண்டிருக்கும் பெக்குண்டோ தனது அக்காவின் வீட்டிற்கு வெகு நாட்களுக்கு பின்பு வருகின்றான்.முதலில் அவனை சேர்க்க தயங்கும் அக்குடும்பத்தினர்..அவனின் சாகச பேச்சிலும்,இதற்கு முன் அறிமுகமற்ற உற்சாகம் கூட்டும் புதிய பழக்க வழக்கங்களாலும் அவனோடு சேர்ந்து வாழ்வை கொண்டாடுகின்றனர்..மெல்ல மெல்ல தங்களின் குடும்பம் சரிவை நோக்கி செல்வதை உணர தொடங்கும் தருவாயில்.... கூட்டாய் எடுக்கும் பயங்கர முடிவே அவர்களை மீட்டெடுக்கின்றது.அர்ஜென்டினா நாட்டின் குடும்ப வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய செய்திகளை கொண்டிருப்பது இக்கதையின் சிறப்பு.

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் "மற்ற மரணம்"

இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரான போர்ஹேவின் "மற்ற மரணம்" சிறுகதை...சரித்திரத்தோடு மனிதன் கொண்டுள்ள தீராத தேடலை மையமாய் கொண்ட நேர்த்தியான புனைவு.டாமியான் என்னும் போர்வீரனை குறித்த தேடலில் இறங்கும் நாயகனுக்கு டாமியான் என்கின்ற பெயரில் இருவர் இருந்ததும்...தான் அறிய விரும்பிய டாமியான் குறித்த பிம்பங்கள் உருக்குலைந்து போனது தெரிய வரும் பொழுது டாமியானின் செயலை நியாயபடுத்தும் தீர்வை கொள்கின்றான்.பிரபஞ்ச சரித்திரத்தோடு நமக்குள்ள உறவினை பல்வேறு பரிமாணங்களில் விளக்க முயலும் முயற்சி இது!!





பிரேசில் சிறுகதைகள்

ஜோவோ உபால்டோவின் "தாயகத்து அலன்டெலோன்"

நவீன வாழ்வில் செக்ஸ் என்பது விந்து எடுப்பதும் - கொடுப்பதுமான வியாபாரம் ஆகி வருவதை மறைமுக குறியீடாய் சொல்லும் இக்கதை,சமுதாயத்தின் மீதான கவலையை முன்னிறுத்துகின்றது.70 களில் வெளிவந்த இக்கதை தற்பொழுதைய சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சர்யமே.இங்கு "அலன்டெலோன்" என்பது விந்து வங்கியின் குறியீடாய் சொல்லப்படும் காளை மாடு.

ஜோர்ஜ் அமாடோவின் "பறவைகள் நிகழ்த்திய அற்புதம்"

இந்த தொகுதியில் எனக்கு பிடித்த கதை.வாழ்க்கை குறித்த கவலை ஏதும் அற்ற நாடோடி பாடகனை பற்றியது.நகரங்கள் தாண்டி....தேசங்கள் தாண்டி.. செல்லும் இவனின் பயணம் சாகசங்கள் நிறைந்ததல்ல,காதல்கள் நிறைந்தது!!பேரழகு கொண்ட நாடோடி பாடகன் உபால்டோ கவிதைகளாலும்,பெண்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான் என்னும் வரிகளே போதும் அவனை குறித்து அறிந்து கொள்ள!! ப்ரான்ஹாசை நகரில் சாபோ என்னும் பேரழகியை சந்திக்கும் உபால்டோ.....அவளோடு காதல் கொண்டிருக்கும் வேளையில் சாபோவின் கணவன் வந்துவிடுவதால் தப்பிக்க ஓட்டமெடுப்பதும் ....பின் எதிர்பாரா வண்ணம் பறவைகள் கொத்தி சென்று அவன் உயிரை காப்பாற்றுவதாகவும் முடிகின்றது இக்கதை.

போர்ச்சுகீஸ் சிறுகதை

கிளாரிஸ் லிச்பெக்டாரின் "அன்பு"

சட்டென தோன்றி மறையும் ஏதோ ஒரு காட்சியோ,சம்பவமோ அந்த நாள் முழுதும் நினைவில் அகலாது இருந்து இயல்பை புரட்டி போட்டுவிடுவதுண்டு..பார்வையற்ற யாசகனை காணும் நாயகி அன்னாவின் நிலை மாற்றத்தை நேர்த்தியான காட்சி கோர்வைகளால் சொல்லும் இக்கதை வேறுபடும் வாழ்க்கை சூழல் தோற்றுவிற்கும் மனகுழப்பத்தை ஒரு பெண்ணை முன்னிறுத்தி பகிர்கின்றது.

சிலி தேசத்து சிறுகதை

இசபெல் அலண்டேவின் "நீதிபதியின் மனைவி"

பெரும் புரட்சிகாரனான நிகோலசின் சாவு ஒரு பெண்ணால் தான் என பிறக்கும் பொழுதே குறி சொல்லபடுகின்றது.நீதிபதியின் மனைவி காசில்தா தான் அந்த பெண் என்று துவக்கத்திலேயே முடிவையும் சொல்லி விரிகின்றது இக்கதை.ஒரு நாவலை வாசித்த திருப்தி. நேர்த்தியான திரைக்கதை போல,முடிவு தெரிந்தும் தொடர்ந்து வாசிக்க தூண்டும் கதையாடல்.கதையின் முடிவு நிஜவாழ்க்கையில் அபூர்வமாய் காணக்கிடைப்பது,இருப்பினும் அது நம்பும்படியாக தந்திருப்பதே சாதனை.


கொலம்பியா தேசத்து சிறுகதை

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் "நீரில் மூழ்கிய நிகரற்ற அழகன்"

நோபெல் பரிசு பெற்றுள்ள மார்க்வெஸின் இக்கதை சிறுவர்களுக்கானது.Fairy Tales கதைகளை போல.......பிரம்மாண்ட உடலமைப்பு கொண்ட பேரழகனின் சடலம் சிறு மீனவ கிராமத்தில் கரை சேர்கின்றது..எதிரி தேசத்து கப்பல் என நினைக்கும் குழந்தைகள் அதை கண்டு மிரள்வதும் பின்பு கிராமத்தினர் அவனை குறித்த சந்தேகங்களையும்..தமக்கு தெரிந்த பழங்கதைகளையும் ஒன்றாய் புனைந்து அவன் நரமாமிசம் தின்பவர்களை கொல்லும் கடல் தேவனான எஸ்தபான் என்கிற முடிவிற்கு வருகின்றனர்.எஸ்தபானின் சடலத்தை அடக்கம் செய்வதிற்கு முன்பு அவனின் சடலத்திற்கு அலங்காரம் செய்ய அப்பெண்கள் செய்யும் அலட்டல்கள் ஆண்களின் பார்வையில் மிகுந்த நகைச்சுவையாய் சொல்லப்பட்டுள்ளது.பூக்களாலும்,பட்டு துணிகளாலும் அலங்கரிக்கபடும் எஸ்தபானின் சடலம் யாரும் நினைத்திடா வண்ணம் அடக்கம் செய்யபடுகின்றது.பெரும் சிரத்தை கொண்டு அந்த புதியவனிற்கு அவர்கள் செய்யும் மரியாதை கிராமத்தினரின் தூய்மையான அன்பினை தெரிவிப்பதாய் உள்ளது.


வெளியீடு - வர்ஷா,மதுரை

Sunday, March 7, 2010

இந்தியச் சிறுகதைகள் - "பாறைகள்"

நம் தேசத்தின் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறுகதைகளின் இத்தொகுப்பு சமகால இந்திய இலக்கியம் குறித்த தெளிவான பார்வை பெற உதவாவிடினும் இந்திய மொழிகளின் சில காத்திரமான படைப்புகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது.மேலும் தமிழ் இலக்கியம் குறித்த ஒருவித திருப்தியும்,மகிழ்ச்சியும் உண்டாகின்றது.எதன் பொருட்டும் நமது படைப்புகள் குறைந்தவை அல்ல என்பதும் தெளிவாய் புலப்படுகின்றது.இத்தொகுதியின் பெரும்பால கதைகள் விளிம்பு நிலையின் அவலங்களை சொல்லுபவை.தேசம் முழுதும் பொதுவாய் பரவி கிடக்கும் ஏழ்மை இக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க போதுமானதாய் இருப்பது வருத்தமே.இத்தொகுதியில் உள்ள பிறமொழி எழுத்தாளர்கள் குறித்த சிறு குறிப்புகள் அவர்கள் குறித்து அறிய எளிதாய் உதவுகின்றது.


மொகள்ளி கணேஷின் "காளி" (கன்னடம்)- தமிழில் பாவண்ணன்

கன்னட இலக்கியத்தில் குறிப்பிடதக்க தலித் எழுத்தாளர் மொகள்ளி கணேஷ்.தலித் சேரி ஒன்றில் வாழ்ந்து மறைந்த காளி என்னும் பெண்ணொருத்தியின் நினைவுகளை நாயகன் மீட்டெடுக்கும் இக்கதை,தலித் சிறுவர்கள் ஒரு வேலை உணவிற்காக எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை,நல்ல உணவின் பொருட்டும்,உடையின் பொருட்டும் கொண்டிருக்கும் கனவுகள்,அது நிறைவேற பண்ணை கூலிகளாய் தொடர்ந்திட கூட தயங்காத மனநிலைக்கு தள்ளபட்டிருப்பதையும் விவரிக்கும் வரிகளில் பதற்றம் கொள்ள செய்கின்றன.பெருமாள் முருகனின் "கூள மாதாரி" மற்றும் இமயத்தின் "கோவேறு கழுதைகள்" நாவல்கள் விரிவாய் சொல்லியதை சிறுகதை வடிவில் படிப்பதாய் இருந்தது.

குஷ்வந்த் சிங்கின் "ஒரு பெண்மணியின் சித்திரம்" (பஞ்சாபி) - தமிழில் முத்துமோகன்

வெகு அழகானதொரு கதை.தனது பாட்டி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் இக்கதையில் கால சுழற்சியில் சிறுவர்கள் படிப்பு,வேலை என திசை மாறி கொஞ்ச கொஞ்சமாய் பாட்டி,தாத்தாவிடம் இருந்து அந்நியபட்டு போவதை தனக்கேயான பகடி கலந்து கூறி உள்ளார்.

பிரிஜ் மோகனின் "வால்" (சிந்தி)- தமிழில் சுந்தர்ஜி

விசுவாசத்தின் பெயரில் எதையும் செய்ய தயங்காத இன்றைய அலுவலக சூழலை பகடி செய்யும் இக்கதை,அதீத நன்றி உணர்ச்சியின் காரணமாய் நாயகனுக்கு வால் முளைப்பதும்,அதன் தொடர்ச்சியாய் அவன் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளும் என நகைச்சுவையாய் நீள்கின்றது.ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் நன்றி மிக்கவர்களாகி..கண்ணுக்கு புலப்படா வால் கொண்டு திரிவதாய் மாயையை தோற்றுவிக்கின்றது இக்கதை.



ஆர்.எஸ்.சுதர்சனத்தின் "சாம்பலின் சுமை" (தெலுங்கு)- தமிழில் சா.தேவதாஸ்

புகை பிடித்தலை முன்வைத்து நாயகன் தனக்குள் எழுப்பி கொள்ளும் கேள்விகளும் அது குறித்தான கடந்த கால நினைவுகளுமான இக்கதை,சிகரட் பழக்கம் குறித்தான ஒருவனின் பார்வையை விரிவாய் முன்வைக்கின்றது.தனிமையின் குறியீடாய் அதை கொள்ளும் நாயகனின் நினைவில் நீங்காது இருக்கும் நிகழ்ச்சி ஒன்றே அதற்கு காரணம் என விளக்குகின்றது இக்கதை.

அமிதாப்பின் "சபிக்கபட்ட வாழ்க்கை" (மராத்தி) - தமிழில் சா.தேவதாஸ்

வறுமையின் குரூரத்தை இது போல எவரும் விளக்கி இருக்க முடியாது..அடித்து வீழ்த்தப்படும் பசுவின் இறைச்சிக்கு ஒரு சேரியின் மக்கள் அடித்து கொள்வதும் அவர்களுக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் தனக்கான இறைச்சியை பெற தடுமாறுவதும்..கடைசியாய் பெற்றதை கழுகளின் பிடியில் இருந்து பாதுகாத்து வீடு சேர்ப்பதும் என மேலோட்டமாய் கதை சொல்லி சென்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் மனதை பிசைபவை.இத்தொகுதியின் மிகச்சிறந்த கதை இதுவென்பேன்.

பகவதி சரணின் "வெகுமதி" (ஒரியா) - தமிழில் தேவகி குருநாத்

இந்திய சட்டத்தின் ஓட்டைகளை சாடும் இக்கதை,குற்றங்களின் கிடங்காய் திரியும் பணக்காரனை கொலை செய்யும் அப்பாவி வேடுவனான கினுவாவை பற்றியது.மிருகங்களை வேட்டையாடுவதை போலவே இதுவும் என்று எண்ணி தன் காரியத்திற்காக பரிசை எதிர் நோக்கும் கினுவாவின் பாத்திரபடைப்பு படிப்பறிவில்லாத பாமரனின் வெகுளி மனநிலையின் குறியீடு.

கிரேசியின் "பாறைகள்" (மலையாளம்) - தமிழில் ரவி இளங்கோவன்

ஏழ்மையின் பொருட்டு தொடர்ந்து வரும் குடும்ப சிக்கல்களும் தவிர்க்க முடியா அலுவலக சங்கடங்களும்,குழப்பங்களும் ஒரு பெண்ணின் மனதை பாறையென இறுக செய்வதை தெளிவான காட்சி கோர்வைகளால் உணர்த்துகின்றது இக்கதை.வறுமையினால் கன்னியாஸ்திரி ஆக கட்டாயபடுத்தபடும் சூழலின் அபாயத்தையும் இக்கதை தெளிவுபடுத்துகின்றது.மலையாள இலக்கிய உலகிற்கு புதியவரான கிரேசியின் இக்கதை முக்கியமான சிறுகதைகள் வரிசையில் இடம் பெற்று இருப்பதில் ஆச்சர்யமில்லை.

ந.முத்துசாமியின் "செம்பனார் கோவில் போவது எப்படி?" (தமிழ்)

ந.முத்துசாமியின் கதைகள் இதற்கு முன் அறிமுகம் இல்லை.திரைப்படம் பார்க்க செம்பனார் கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டி புறப்பட யத்தனிக்கும் பெரிய வீட்டு இளைஞன் ஒருவனின் முழு சோம்பேறித்தனத்தை சொல்லும் இக்கதை ஏனோ புழுக்கம் நிறைந்த வேனிற்கால பகல் பொழுதுகளை நினைவூட்டியது!!

வெளியீடு - சந்தியா பதிப்பகம்
தொகுப்பாசிரியர் - தளவாய் சுந்தரம்